இந்திய மட்டைப்பந்து வீரர் எம்.எஸ்.தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று இரவு வெளியிட்டு உள்ளார்.
அவர் வங்காளதேசத்திற்கு எதிராக 2004 ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கினார்.
அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டில் முதன்முறையாக இலங்கைக்கு எதிராக ஐந்துநாள் போட்டியில் விளையாடினார். 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிக்கான அணித் தலைவராகவும், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக ஐந்துநாள் போட்டி அணித்தலைவராகவும் அவர் செயல்பட்டு பெருமை தேடித் தந்துள்ளார்.
இறுதியாக நியூசிலாந்துக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியிலும் அவர் விளையாடியுள்ளார்.
350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்து 773 ரன்கள் எடுத்துள்ள அவர் பேட்டிங் சராசரி 50.6 வைத்துள்ளார். இதேபோன்று 90 ஐந்துநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 ஆயிரத்து 876 ரன்கள் எடுத்துள்ளார்.
இது தவிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று ஐ.பி.எல். போட்டிகளிலும் அவர் விளையாடி வருகிறார். இதற்காக ரெய்னா, பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ் உள்ளிட்டோருடன் சென்னை வந்துள்ள அவர் நேற்று நடந்த பயிற்சியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியில், அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
தோனியின் திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தோனியின் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.
நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ அவர்!
கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.