திருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா? – வெடிக்கும் விமர்சனங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மூத்த சகோதரி வான்மதி (அவருடைய இயற்பெயர் பானுமதி)ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார்.

இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்பு திருமாவளவன் எழுதியுள்ள பதிவு……,

என்னை ஆற்றுப்படுத்திய அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றி!
வழக்கம்போல களப்பணியாற்ற
வல்லமையோடு மீண்டெழுவேன்!
~~~~~~~~~~~~~~~~~
துக்கத்தின் கொடுந்தாக்குதலுக்கு ஆளானவர்கள், அதன் பாதிப்பிலிருந்து அவ்வளவு எளிதில் மீளவியலாது. குறிப்பாக, நம் வாழ்வின் அங்கமாய் இணைந்தவர்கள், நம் நினைவுகளின் கூறுகளாய்ப் பிணைந்தவர்கள், திடுமென ஒருபொழுதில் நிலையாய் இல்லாதுபோகும் நிலையில், இனி ஒருபோதும் அவர்களைக் காணவே இயலாது என்னும் கடும்சூழலில், பேரிடியாய் விழும் பெருந்துக்கம் நமது நெஞ்சை சுக்குநூறாய் நொறுக்கும்!

குடும்பவழி குருதித் துக்கம் அவ்வளவு கொடூரமான வலி வாய்ந்தது. மரணம் போலும் மாவலி உலகில் வேறு யாவுள? உறவின் துக்கம் நிகழ்த்தும் கொடுமையால் உள்ளம் நொறுங்கி சிதைந்து போனால், அதிலிருந்து மீண்டெழுவது அவ்வளவு இலகுவானதில்லை. அத்தகைய நிலைமை உருவாகாமல் பாதுகாக்கும் அளப்பரிய மருத்துவமே ஒருவருக்கொருவர் ஆற்றுப்படுத்தும் உன்னத அணுகுமுறை!

அக்கா வான்மதியின் இறப்பைத் தாங்கும் வலிமை எனக்கில்லை என்பதைக் கடந்த மூன்று நாட்களில் என்னால் கண்டுணர முடிந்தது. அம்மாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டுமென்றுதான் மனதை திடப்படுத்திக் கொண்டு ஊருக்கு வந்தேன். ஆனால், அம்மாவின் முன்னால் நொறுங்கி சரிந்தேன். இந்த நாட்களில் அம்மா என்னைத் தேற்றும் நிலையே உருவாகியுள்ளது. ஏதோவொரு குற்ற உணர்வுக்குள் நான் வீழ்ந்து கிடக்கிறேன்.

துயர்நெருப்பில் துவளும்நிலையில் உற்றார் உறவினர், இயக்கத் தோழர்கள், அரசியல் கடந்த தோழமை உறவுகள் என யாவரும் காட்டும் பரிவு, என்னை மெல்ல மெல்ல ஆற்றுப்படுத்துவதை அறியமுடிகிறது. துக்கத்தினின்று மீண்டெழுவதற்கான வல்லமை அளிப்பதாக உணரமுடிகிறது.

என்னைத் துக்கம் விசாரித்து எனக்கு ஆறுதல்கூறி அத்தகைய மீண்டெழும் வல்லமை வழங்கிய அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அக்காவின் இறப்புக்காக இரங்கல் தெரிவித்து என்னை ஆற்றுப்படுத்திய தலைவர் பெருமக்கள்- குறிப்பாக, தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின், புதுவை முதலமைச்சர் வெ. நாராயணசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராசன், மேனாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ.இராசா, தயாநிதிமாறன், பொன்.இராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன்,

மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜு, மேனாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.இராமகிஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் டி.இராஜா, தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், வீரபாண்டியன், மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஞானதேசிகன், சு.திருநாவுக்கரசர், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தேமுதிக எல்.கே.சுதீஷ், குன்றக்குடி ஆதீனம்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, பாரிவேந்தர், டிகேஎஸ் இளங்கோவன், டி.ஜெயக்குமார், தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி, கலாநிதி, சு.வெங்கடேசன்

சட்டமன்ற உறுப்பினர்கள் வெ.கணேசன்,அபுபக்கர், மேனாள்சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, கராத்தே தியாகராஜன், சிவசங்கர், வெற்றிவேல்,

முன்னணி அரசியல்கட்சித் தலைவர்கள் நாம்தமிழர் சீமான், தி்.வேல்முருகன், டிடிவி தினகரன், நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், டாக்டர் கிருஷ்ணசாமி, ஆர்ம்ஸ்ட்ராங், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி, பஷீர்அகமது, ஹைதர்அலி, தெஹ்லான்பாகவி, நெல்லை முபாரக், முகமதுஅன்சாரி, என்.ஆர்.தனபாலன்,

குவைத் கலீல் பாகவி, திருமுருகன் காந்தி, சுபவீ, s.v.ராஜதுரை, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சல்மா, கவிஞர் சுகிர்தராணி, குடந்தை அரசன், கே. எஸ். அப்துர்ரகுமான், ஓபிஎஸ் இராஜா, சித்ரமுகி சத்யவாணிமுத்து, அமெரிக்கை நாராயணன், தடா.பெரியசாமி, நாகை.திருவள்ளுவன், எவிடென்ஸ் கதிர், அ.விநோத், சுப.அண்ணாமலை, மயூரி, இராஜேஸ்வரிப்ரியா, எதிரொலிமணியன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, காயத்ரிரகுராம், நவீன்பாலாஜி,

திரைப்பட இயக்குநர்கள் விக்ரமன், பா.ரஞ்சித், அமீர், மோகன்G,

ஊடகவியலாளர்கள் பகவான்சிங், கார்த்திகைச்செல்வன், ஃப்ரன்ட்லைன் விஜய், மு.குணசேகரன், இந்து இராமகிஷ்ணன், மை.பா.நாராயணன், விக்ரமன்,

வழக்கறிஞர்கள் குழுமத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், டெல்லி வழக்கறிஞர் குமணன்,
அரசு உயர்அதிகாரிகள் ஏ.கே.விசுவநாதன்IPS, ரத்னாIAS, பாலகிருஷ்ணன்IAS, சந்திரசேகர்IPS, சீனிவாசன்IPS, அண்ணாதுரைIAS

மலேசியா செங்குட்டுவன், பாஸ்கர், கனடா பராசுரன், இலண்டன் ஆனந்தன், வாமன், ஜெனிவா ராஜா, அமேரிக்காவிலிருந்து பாதிரியார்கள் ஆரோ, அன்பு , ஆரோக்கிய ராஜ் உள்ளிட்ட தனிப்பெருங் கருணை கொண்ட அனைத்து நல்லோருக்கும்; எமது கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னணி தோழர்கள் மற்றும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள், எனது உற்றார் உறவினர்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

கருணைமிகு தொண்டுள்ளத்துடன் களமிறங்கி நள்ளிரவுக்கும் மேலாகக் கொரோனா அச்சமின்றிப் பணியாற்றி அக்காவின் திருவுடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் ஹஸ்ஸன் பைஜி தலைமையிலான திருச்சி மாவட்டத் தோழர்களுக்கும் மற்றும் சென்னை மாவட்டத் தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

வழக்கம்போல களப்பணியாற்ற
வல்லமையோடு மீண்டெழுவேன்!

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

இப்பதிவின் மூலம் தமிழகத்தின் எல்லா அரசியல்கட்சித் தலைவர்களும் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கின்றனர் என்று தெரிகிறது.ஒரே ஒருவரைத் தவிர. அவர் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு.

அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஒரு துயரத்தில் ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாத அளவு வெறுப்பு அவருக்கு இருக்கிறது என்பது ஆரோக்கியமான செய்தி அல்ல என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Leave a Response