ஜெயலலிதா வீடு அரசுடைமை ஆனது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த வீட்டை எடுத்துக் கொண்டு அதை அரசு நினைவு இல்லமாக மாற்ற அ.தி.மு.க. அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இப்போது அந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது…..

சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள வேதா நிலையம் இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அந்த இல்லம் அமைந்துள்ள மொத்த பரப்பளவான 10 கிரவுண்ட் 322 சதுர அடி நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தி அரசுக்கு ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. நில எடுப்புப் பணிகளுக்காகவும், மதிப்பீட்டுப் பணிகளுக்கும் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விரிவான ஆய்வுகள் நடத்தி, பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் அப்பகுதி மக்களைச் சந்தித்து கருத்து கேட்பது மற்றும் கலந்துரையாடல்கள் நடத்துவது ஆகிய பணிகள் முடிக்கப்பட்டன.

சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை, வரைவுத் திட்ட அறிக்கை ஆகியவை சென்னை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஏதுவாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் பொதுவிசாரணை நடத்தப்பட்டது.

அந்த இல்லத்தில் இருந்து குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை இல்லாததால் சமூகத் தாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படத் தேவையில்லை என்றும், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இல்லாததால் அதற்கான மதிப்பீடும் தேவை எழவில்லை என்றும் சமூக தாக்க மதிப்பீட்டு முகமையகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர், நிபுணர் குழுவை அமைத்தார். இறுதி சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் நிபுணர் குழுவின் குறிப்புரை அரசிதழிலும், போயஸ் கார்டன் பகுதியிலும் வெளியிடப்பட்டது.

பின்னர் வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுதல் தொடர்பாக தென்சென்னை வருவாய் கோட்டத்தின் நில எடுப்பு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரால் முதல் நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் சென்னை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையில், நில எடுப்புச் சட்டத்தின்படி, பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை எனவும், அவர்களை அப்புறப்படுத்தவோ, மறு குடியமர்த்தவோ, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் எழவில்லை என்ற குறிப்புடன், நில எடுப்பு அலுவலர் அறிவிப்பு வெளியிட ஆணையிடப்பட்டது. இதற்கான விளம்பரங்கள், பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

வேதா நிலையம் இல்லத்தில் உள்ள ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை பராமரிக்க அறிவிக்கை வெளியிட்டு, அதற்காக ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அறநிறுவனத்தை அமைக்க அவசரச் சட்டம்’ பிறப்பிக்கப்பட்டது.

மேலும், வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக உத்தேசத் தொகையான ரூ.67 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 225 தொகைக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக புகழேந்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், வேதா நிலையத்தைக் கையகப்படுத்தி அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு பொதுமக்களின் வரிப்பணம் அதிகம் செலவிடுவதைக் கருதி, அதனைத் தவிர்ப்பதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அதை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம். அதன் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டது.

நில எடுப்பு சட்டத்தின்படி 12 சதவீதம் என்ற வீதத்தில் கூடுதல் சந்தை மதிப்பு சேர்த்து, மொத்த இழப்பீடு தொகை ரூ.67 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690 என கணக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தேச தொகையில் குறைவாக இருந்த மீத இழப்பீட்டு தொகையான ரூ.7 லட்சத்து 98 ஆயிரத்து 465 தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

வேதா நிலையத்தின் மீது உரிமை கோருபவர்களால் தங்களது கோரிக்கையை நில எடுப்பு அலுவலரிடம் சமர்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூறப்பட்ட பரிந்துரைகளை பரிசீலனை செய்து, அதை முதலமைச்சரின் இல்லமாக மாற்ற சாத்தியக்கூறுகள் இல்லை என அரசால் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இழப்பீட்டுத் தொகை பற்றிய அறிவிப்பை நில எடுப்பு அலுவலரான தென் சென்னை கோட்டாட்சியர் 22 ஆம் தேதி வெளியிட்டார். அவர், கூறிய இழப்பீட்டுத்தொகையான ரூ.67 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690, நகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா இல்லம் சொத்து அரசின் சொத்தாகி உள்ளது. எனவே, வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் அந்த நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குரிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள வேதா நிலையம் இல்லம் மற்றும் அவ்வில்லம் அமைந்துள்ள நிலம், ஆகியவை 22 ஆம் தேதியன்று நில எடுப்பு அலுவலரால் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. அங்குள்ள நிலம் மற்றும் ஜெயலலிதாவின் பொருட்களைப் பராமரிக்கவும், நிர்வகிக்கவும் ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அறநிறுவனத்திற்கு’ ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Response