முதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே

தற்போதைய நடைமுறையின்படி முதுநிலைக் கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பை, இளநிலைக் கணினி பயன்பாடுகள் (பிசிஏ) படித்தவர்கள் மட்டும் 2 ஆண்டுகள் படித்தால் போதுமானது. அதேநேரம் இதர இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

எம்சிஏ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. மேலும், 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதால் எம்சிஏ சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதைத் தவிர்த்து சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் எம்சிஏ படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாகக் குறைக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு (ஏஐசிடிஇ) கோரிக்கை அனுப்பப்பட்டது. அதை ஏற்றுக் கடந்த பிப்ரவரி மாதம் ஏஐசிடிஇ, எம்சிஏ படிப்பை 2 ஆண்டுகளாகக் குறைத்தது.

இந்நிலையில் தற்போது இதற்கான அரசாணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2020-21 ஆம் கல்வியாண்டில் இருந்து எம்சிஏ படிப்பு 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, படிப்பில் மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response