கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் – விளக்குகிறார் கி.வெ

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வது – மாநில
உரிமையைப் பறிப்பது! மக்கள் நலனுக்கு எதிரானது! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..

நாடு முழுவதும் உள்ள சுமார் 1500 நகர கூட்டுறவு வங்கிகளை இந்திய சேம வங்கியின் (ரிசர்வ் வங்கியின்) நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்லும் அவசரச் சட்டம் பிறப்பிக்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இவற்றில் உள்ள 5 இலட்சம் கோடி சேமிப்புத் தொகை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும். தமிழ்நாட்டில் 120 கூட்டுறவு வங்கிகள் இவ்வாறு சேம வங்கியின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுவரை இந்திய சேம வங்கி பிறப்பிக்கும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டுத்தான் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டன. என்றாலும், அவற்றின் அன்றாட நிர்வாக செயல்பாடுகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தன. இனி தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாடு எதுவும் இந்த கூட்டுறவு வங்களின் மீது இருக்காது. கூட்டுறவு வங்கிகளின் மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அமர்த்துவது உட்பட அனைத்து நிர்வாக அதிகாரங்களும் சேம வங்கியின் வழியாக இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.

இனி இந்திய அரசு விரும்புகிற போதுதான், விரும்புகிற வடிவில்தான் பெயரளவுக்கான வங்கியின் இயக்குநர் தேர்தல் கூட நடக்கும். கொஞ்ச காலத்திற்குத் தேர்தெடுக்கப்பட்ட நிர்வாக இயக்குநர் குழு இருக்கக் கூடும். அப்போதும் கூட அந்த நிர்வாகக் குழுவிற்கு எந்த அன்றாட நிர்வாக அதிகாரமும் இருக்காது.

கொரோனா நெருக்கடிக் காலத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறித்துவருகிற மோடி அரசு, இப்போது நகர கூட்டுறவு வங்கிகளையும் மாநில அதிகாரத்தில் இருந்து பறித்து தன்னுடைய அதிகாரத்திற்கு எடுத்து செல்கிறது.

24.06.2020 அன்று இது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவை விளக்கிப் பேசிய மூத்த அமைச்சர் பிரகாசு ஜவடேக்கர், பஞ்சாப் மற்றும் மகாராட்டிர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பல கோடி ஊழலை இந்த நடவடிக்கைக்குக் காரணமாக முன்வைத்தார். ஏதோ ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு கூட்டுறவு வங்கிகள் சென்றுவிட்டால் அவ்வங்கிகளில் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கப்பார்க்கிறார். உண்மை நிலை என்ன?

ரிசர்ங் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும் போதுதான் கடந்த ஆண்டு வரை 9 லட்சத்து 77 ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகளில் மோசடிகள் நடந்துள்ளன என்று இந்திய நிதி அமைச்சரே நாடளுமன்றத்தில் அறிக்கை முன்வைத்தார். இவை சட்டத்தை மீறிய மோசடிகள்!

சட்டத்தை வளைத்து ஏறத்தாழ 8 லட்சம் கோடி ரூபாய் அதானிக்கும் அம்பானிக்கும் அகர்வாலுக்கும் டாடாவுக்கும் வாராக் கடன் என்று தள்ளுபடி செய்து கொடுத்தது சட்டத்தைப் பயன்படுத்தி நடத்திய மோசடி ஆகும்.

அண்மையில் வெளிவந்த எஸ் வங்கி மோசடி ரிசர்வ் வங்கி கண்காணிப்புக் குழுவின் கீழ் அந்த வங்கியின் நிர்வாகம் வந்த பின் நடந்ததுதான். ரிசர்வ் வங்கியின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் வங்கிகளில் அரசியில் தலையீடோ ஊழலோ நடக்காது என்பது போலவும், கூட்டுறவு வங்களில் தான் அரசியல் தலையீடு இருக்கிறது என்பது போலவும், முற்றிலும் பொய்க் காரணத்தை கற்பிக்கிறது இந்திய அரசு. இது ஏற்புடையது அல்ல. உண்மை நிலவரமும் அல்ல!

இது அப்பட்டமான மாநில உரிமைப் பறிப்பு என்பதோடு வங்கி வாடிக்கையாளர் நலனையும் பறிக்கும் ஆபத்து இதிலிருக்கிறது. அரசு வங்கிகளைவிட கூட்டுறவு வங்களில் கிட்டதட்ட 1 விழுக்காடு வரை சேமிப்புக்குக்கூடுதல் வட்டி கிடைக்கிறது. இனி அந்த வாய்ப்பு பறிக்கப்படும் சூழல் உள்ளது.

வேளாண்மைக்கான நகைக்கடன் வாங்கும்போது கூட்டுறவு வங்கிகளில் 4 விழுக்காடு வட்டிக்குக் கடன் கிடைக்கும். ஆனால் அரசு வங்கிகளில் சென்ற ஆண்டுவரை 6.3 விழுக்காடு வட்டியில் வேளாண்மைக்கான நகைக் கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது அந்த வட்டியும் நடைமுறையில் இல்லை. வேளாண்மைக்கான கடன் என்ற வகையினத்தில் நகைக் கடனே கிடையாது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

இதனால் நகைக்கடனுக்கான வட்டி அரசு வங்கிகளில் 10 விழுக்காடாக உயர்ந்துவிட்டது, கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் வட்டியை விட இது ஏறத்தாழ 2.5 மடங்கு அதிகம் ஆகும். இனி கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குச் சென்ற பிறகு நகைக் கடன் வட்டி உயர வாய்ப்பிருக்கிறது. சேமிப்பு கணக்கிற்கு வட்டியும் குறைந்து, வாங்கும் கடனுக்கு வட்டி அதிகரித்து, எளிய மக்கள் அவதிப்படும் நிலைதான் ஏற்படும்.

இப்போது அரசு வங்கிகளில் ஏழை, நடுத்தர மக்களுக்கும், சிறு தொழில்களும் வாங்கும் கடன் அளவு குறைந்து, பெரும் முதலாளிகளுக்கு கோடி கோடியாகக் கடன் வாரி வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இதே நிலை இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் ஏற்படக் கூடும். இதற்கேற்ப ஒரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகள் இணைக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

எனவே எந்த வகையில் பார்த்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் எடுத்து செல்லப்படுவது நல்லதல்ல.

மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் இந்த அவசரச் சட்ட முடிவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதனை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response