எங்கள் வளர்ச்சியை நாங்களே பார்த்துக்கொள்வோம், அந்நிய முதலீட்டாளர்களே வெளியேறுங்கள்- சீமான் ஆவேசம்

 

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சேகரிப்பு மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்  12-09-15 அன்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

இதில் அவர் பேசியதாவது:

‘அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை’ என்கிறார் பெருந்தலைவர் காமராசர். ‘அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் விவகாரமல்ல. அது மக்களுக்கு ஆற்றப்படும் தொண்டு’ என்கிறார் எம்முயிர் அண்ணன் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அதனைப்போல, அரசியல் என்பது மக்களுக்கான சேவையும் அதனை நிறைவுசெய்யும் சேவையுமே என்று அவரது பிள்ளைகள் நாங்கள் முழங்குகிறோம்.

தமிழர்கள் மனிதநேயர்கள் அல்லர்! உயிர்நேயர்கள். அதனால்தான், எமது பாட்டன் வள்ளலார், ‘வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடினான். எமது மறை, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்று போதிக்கிறது. அந்த மறையின் வழியே நாம் தமிழர் கட்சி அனைத்துவுயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கிறது.

மாட்டுக்குக் கோமாரி நோய் வந்தால் அதனைக் காக்க மருத்துவ முகாம் நடத்துவது, புண்ணாக்கு, தவிடு விலையேறினால் அதனைக் குறைக்கப் போராடுவது எல்லாம்  மாட்டுக்கான அரசியல்; சிகரெட்டைப் புகைத்துவிட்டு காடுகளில் போடாதே என்பது மரங்களுக்கான அரசியல்; ‘தெருநாய் நம்மைக் கடித்தால்கூட அதனை அடிக்காதே! நகராட்சிக்குத் தகவல் சொல்’ என்பது நாய்களுக்கான அரசியல்.

நாம் தமிழரின் அரசியலானது அனைத்து உயிர்களுக்குமானது. நாம் தமிழர் கட்சி அனைத்து மக்களுக்கானது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்மை பெருமை மிக்க ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம்; உலகிற்கு அறிவியல், கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்த மண்ணின் மக்கள் நாம்; கடல்கடந்து சென்று கலன் செலுத்தி உலகின் மூன்றாம் வல்லரசை நிறுவிய அருமைப்பாட்டன் அருண்மொழிச்சோழன், அவரது அன்பு மகன் அரசேந்திரச்சோழனின் வாரிசுகள் நாம். இன்றைக்கு அழித்தொழிக்கப்பட்டு மொழியை சிதையக்கொடுத்து அடிமையாய் நிற்கிறோம். ஆனாலும், ஆழ்மனதில்  கொட்டிக்கிடந்த கோபத்தை எல்லாம் நம் உடலில் கொட்டிச்செத்தோமே ஒழிய எவரையும் கொல்லவில்லை. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அப்புறம் ஏன் நிறுத்தவில்லை? இருந்த தமிழக அரசு தமிழனுக்கான அரசாக இல்லை.

 

ஒரு தேசிய இனத்தின் உரிமை மீட்சிக்கு அரசியலை முன்னெடுக்கிறோம். ஊழலற்ற உண்மையும் நேர்மையுமான மக்களாட்சியைக் கட்டியெழுப்பத் துடிக்கிறோம். இங்கு சிறுபான்மையாக இருக்கிற தெலுங்கர்கள் ஆந்திராவில் பெரும்பான்மை தேசிய இனத்தின் மக்கள். இங்கு சிறுபான்மையாக இருக்கிற கன்னடர்கள் கர்நாடாகாவில் பெரும்பான்மை தேசிய இனத்தின் மக்கள். இங்கு சிறுபான்மையாக இருக்கிற மலையாளிகள் கேரளாவில் பெரும்பான்மை இனத்தின் மக்கள். அதனால், பிறதேசிய இனங்களை பகையினமாக மாற்றிக்கொண்டு தேசிய இனத்தின் விடுதலைக்குப் போராட முடியாது. ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்டியெழுப்பிய இராணுவத்தில் தலைவரின் மெய்காப்புப்படையிலும் சிங்களர்கள் இருந்தார்கள். தலைவர் இந்தளவுக்கு படையைக் கட்ட முடிந்ததென்றால் அதுவும் ஒரு காரணம். கர்நாடாகாவில் ஒரு கோடி தமிழர்கள் இருக்கிறோம். ஆனால், அங்கு எங்களுக்கு அரசியல் இல்லை. அந்த மண்ணின் மக்கள் முன்னெடுக்கிற அரசியலோடு இணைந்து பயணிக்கிறோம். அதனைப்போல, மகாராஷ்டிராவிலும் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இருந்தும் எங்களுக்கென்று எந்த அரசியலும் அந்த மண்ணில் இல்லை. அந்த மண்ணைச் சேர்ந்த அரசியல் கட்சிகளோடே இணைந்து பயணிக்கிறோம். இப்படித்தான், இந்த மண்ணில் நாங்கள் முன்னெடுக்கிற இந்த  அரசியலை ஆதரித்து நிற்கவேண்டியது பிறதேசிய இன மக்களின் தார்மீகக் கடமை; உரிமை.

நாங்கள் நல்லாட்சியை நிறுவ நினைப்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மக்களுக்கும்தான். இலவசக் கல்வியையும், மருத்துவத்தையும் தருவோம் என்பது அனைத்து மக்களுக்கும்தான். அதனால், எமது அரசியல் அனைவருக்குமானது; தலைமை எப்போதும் தமிழர்களுக்கானது. இங்கு திராவிடத் தலைவர்கள், ‘தமிழர்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம்’ என்கிறார்கள். தமிழர்களின் உரிமையில் முதன்மையான உரிமை, தமிழனே தன் நிலத்தை ஆளுவதுதான். சுயமரியாதையைப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். தமிழனே தன் மண்ணை ஆள்வதுதான் அவனுக்கு உண்மையான சுயமரியாதை. ‘ஒருவனுக்கு நல்லாண்மை என்பது தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்’ என்கிறார் எமது மறையோன். எனது வீட்டையும், நாட்டையும் நானே ஆள்வதே எனது ஆண்மை என போதிக்கிறார். தமிழன் இந்த நிலத்தை ஆண்டுக்கொண்டிருந்தால் 20 தமிழர்களை ஆந்திரக் காட்டுக்குள் கொன்று போட்டிருப்பார்களா? ஈழத்தில் போரை நடத்துகிற துணிவு சிங்களனுக்கு வந்திருக்குமா?  ஈழத்தில் எமது இன மக்களைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களுமா விரும்பினார்கள்? சோனியா காந்தி குடும்பத்தின் ஒற்றை விருப்பத்திலே எம் இனம் கொல்லப்பட்டது. எம் இனத்தைக் கொல்ல ஆயுதங்களும், இராணுவத்தளவாடங்களும், வட்டியில்லா கடனாக பல கோடிகளையும் கொட்டிக்கொடுத்தது காங்கிரசு அரசு. அப்போது தமிழகத்தை ஆண்டது ஐயா கலைஞர் அவர்கள். ‘எம் இனத்தைக் கொல்ல இந்திய அரசு சிங்களர்களுக்கு ஆயுதம் கொடுத்தால், எம் இனத்தைக் காக்க விடுதலைப்புலிகளுக்கு நான் ஆயுதம் கொடுப்பேன்’ என அவரால் சொல்ல முடியாதா? சொன்னால் என்ன செய்வார்கள்? ஆட்சியைக் கவிழ்ப்பார்கள். ஆட்சியைக் கவிழ்த்திருந்தால் அடுத்து வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வென்றிருக்கும். ஏன் ஐயா கலைஞர் செய்யவில்லை? தமிழர்களின் உயிரைவிட அவருக்கிருந்த பதவிவெறி. அதனால்தான், இவர்களை ஒழித்துக்கட்ட பணம், பதவி, புகழ் இவை எவற்றிற்கும் அடிமையாகாத உழைக்கும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள், தினக்கூலிகளின் வாரிசுகள் ‘எளிய மக்களின் அரசியல் புரட்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்து அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.  ஒரு பெரும்பாறையை கடப்பாறை கொண்டு புரட்டிப்போடுகிற செயல்தான் புரட்சி. 60 ஆண்டுகளாக ஊழலிலே கொழுத்து பெருத்த பூதங்களாக இருக்கிற திமுகவையும், அதிமுகவையும் ஒரே அடியில் வீழ்த்துகிற செயல்தான் புரட்சி. தோற்றுவிட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார்கள். வென்றால் மகிழ்ச்சி! தோற்றால் பயிற்சி! தொடரும் முயற்சி; இதுதான் எங்கள் தத்துவம்.

தமிழக அமைச்சர், ‘தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’ என்கிறார்.  ஒருநாளைக்கு ½ லிட்டர் மட்டும் தண்ணீர் குடியுங்கள் என்கிறார். மருத்துவர் ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்கிறார். என்ன செய்யலாம்? எங்களைத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தச் சொல்கிற அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு தண்ணீரை உறிஞ்சிக்கொள்ள எப்படி அனுமதிக்கிறது? தண்ணீர், அனைத்து உயிர்களுக்கானது. நாம் தாகம் எடுத்தால் தண்ணீரைப் பருக தண்ணீர் போத்தலை வாங்கிக் பருகுகிறோம். தண்ணீரை வியாபாரமாக்கி போத்தலில் அடைத்துவிட்டால் கொக்கும், குருவியும் எப்படி தண்ணீர் பருகும்? ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எங்களுக்கே ‘தண்ணீரையும், உப்பையும் விற்கக்கூடாது’ என்று சொல்லி வளர்த்திருக்கிறார்கள். அரைநூற்றாண்டுகளாக ஆண்ட ஆட்சியாளர்களுக்கு இதுகூடத் தெரியாதா?  எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிற அரசு தண்ணீரை மட்டும் ஏன் காசுக்கு விற்கிறது? அரைநூற்றாண்டுகளாக இந்த மண்ணை ஆண்டிருக்கிறது திராவிடக்கட்சிகள். ஆனால், வெறும் 9 வருடங்களே ஆண்ட காமராசர் ஆட்சியில் செய்த எதனையும் செய்யவில்லையே ஏன்? பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய அரசு குடிக்க வைக்கிறது. ராஜபக்சே எம்மின மக்கள் ஒன்றரை முக்கால் இலட்சம் பேரைக் குண்டுப் போட்டுக் கொன்றான். கருணாநிதியும், ஜெயலலிதாவும் குடிக்க வைத்து இரண்டு இலட்சம் பேரைக் கொன்றிருக்கிறார்கள். இந்த இருசெயல்களுக்கும் என்ன வேறுபாடு? ராஜபக்சேவும் இனத்தின் எதிரிதான். இவர்களும் இனத்தின் எதிரிகள்தான். கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் சொந்தமாகவே மதுபான ஆலைகள் இயங்குகிறது. மதுபானக்கடைகளில் மது விற்றால் கடைக்குக் காசு போகிறது. மதுபான ஆலைகளில் மது விற்றால் இருவருக்கும்தானே காசு போகிறது?  அரைநூற்றாண்டுகாலத் திராவிட ஆட்சியில் வெட்டப்பட்ட ஏரிகள் எத்தனை? எண்ணற்ற ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, ஒரு ஏரியும் வெட்டப்படவில்லையே! குளிக்காமல் ஒருவாரம்கூட இருந்துவிடலாம்; தண்ணீர் குடிக்காமல் ஒருநாள் கூட இருக்க முடியாது. இதனைத்தான், ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறான் எமது பாட்டன் வள்ளுவன். அந்த நீரைச் சேமிப்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது அரசு? ‘வீட்டில் மழைநீரை சேமியுங்கள்’ என்கிறார்கள்; வீட்டில் நாங்கள் சேமிக்கிறோம். நாட்டில் நீங்கள் எவ்வளவு மழைநீர் சேமித்திருக்கிறீர்கள்?

நாம் தமிழர் ஆட்சிக்கு வருகிறபோது வயிறுக்கும், உயிருக்கும்தான் முதன்மை முக்கியத்துவம் அளிக்கும். ‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்கிறார்கள். பசி வருகிறபோது மனிதனின் உயரிய பத்து குணங்களும் பறந்துவிடும்; ஒழுக்கச்சிதைவு ஏற்படும். பசிக்காக மனிதன் களவில் ஈடுபடுகிறான். அதனால், அதனை முதலில் போக்க வேண்டும். ஏழைகளுக்கொரு மருத்துவம் பணக்காரனுக்கு ஒரு மருத்துவம் என்று இருக்கிற நிலையை அடியோடு மாற்ற வேண்டும். அம்மையார் சோனியா காந்திக்கு புற்றுநோய் வந்தது; வெளிநாட்டில் போய் மருத்துவம் செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு புற்றுநோய் வந்தது; அவரும் வெளிநாட்டில் போய் சிகிச்சை செய்துகொண்டார். ஆனால், ஏழைஎளிய மக்களுக்கு புற்றுநோய் வந்தால் என்ன செய்வது? அதனால், தரமான மருத்துவமும், கல்வியும் நாம் தமிழரின் ஆட்சியில் இலவசமாகக் கொடுக்கப்படும். உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், அதனைக்கொண்டு கௌரவமான உழைப்பு; இதுதான் எங்கள் இலட்சியம்.

ஐயா கலைஞர் ஆட்சியில் கிலோ அரிசியை 2 கிலோவுக்கு கொடுத்தார்கள். பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்குப் வந்தபிறகு அதனையும் 1 ரூபாய்க்கு கொடுத்தார்கள். அடுத்த முறை கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது அதனையும் இலவசமாகக் கொடுத்தார்கள். இலவசமாக அரிசியைக் கொடுத்தால்தான் வாங்கிச் சாப்பிட்டு வயிறு வளர்த்து உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் எம் மக்களை வைத்ததுதான் திராவிடக்கட்சிகளின் வளர்ச்சி. அரிசியை இலவசமாகக் கொடுக்கிற அரசு மண்ணை இலவசமாகக் கொடுக்குமா? ஆண்டுமுழுக்க நிலத்திலே நின்று உடல்இரத்தமெல்லாம்  வியர்வையாகப் பூக்க பூக்க நிலத்தில் நின்று உழைக்கிற விவசாயியை இழிவுப்படுத்துகிற செயலில்லையா இது? இலவசமாக அரிசியைக் கொடுப்பது வேளாண்தொழிலை கேவலப்படுத்துகிற வேலை.

இன்றைக்கு அந்நிய முதலீட்டாளர்களைக் கொண்டுவருகிறார்கள். அப்படி வருகிறவர்கள், இலாபத்தேவைக்கு வருவார்களா? மக்கள் சேவைக்கு வருவார்களா? என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்நிய முதலீட்டாளர்களுக்கு நிலத்தை கொடுக்கிறபோது யாருடைய நிலத்தைக் கொடுப்பார்கள்? எம் விவசாய நிலத்தைத்தானே! எல்லா நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்கிறது. இந்தியா எந்த நாட்டில் இதுவரை முதலீடு செய்திருக்கிறது? ஏன் அவர்கள் எல்லாம் இங்கு வருகிறார்கள். இங்குதான் அவர்கள் இலவசமாக நிலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்; தண்ணீரை எவ்வளவு வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள்ளலாம்; தடையற்ற மின்சாரம் இங்குதான் கிடைக்கும்; உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி என எந்த வரியும் இங்குதான் அவர்களுக்கில்லை.  ஆனால், ஒரு ஓலைக்குடிசையில் ஒரு ஏழைப்பாட்டி பூவரசம் இலையில் ஊறுகாய் மடித்து விற்றால் அவர்களுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, தண்ணீர் வரி எல்லாம் விதிக்கப்படுகிறது. அந்நிய நாட்டிலிருந்து வந்த நோக்கியா ஆலை என்ன ஆனது? பல்லாயிரம் கோடிகள் கடனை வைத்துவிட்டு சென்றுவிட்டான்.  வெளிநாட்டிலிருந்து வந்தது குண்டாய் நிறுவனம். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி வேலை செய்கிற தமிழன் ஒருவனை எட்டி உதைத்தானே என்ன செய்ய முடிந்தது? அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்போன என்னைத்தான் அனுமதி மறுத்தார்கள். அதனால், எங்களுக்கு எந்த அந்நிய முதலாளியும் வேண்டாம்; எல்லோரும் வெளியேறுங்கள். நாங்களே எம் நிலத்தைப் பார்த்துக்கொள்கிறோம். எம் நிலமே எங்களுக்குத் தொழிற்சாலை. வேளாண்மை தேசியத்தொழில் என நாங்கள் அறிவிப்போம். மாட்டுக்கு ஊசி போடும் வேலையை அரசாங்க வேலையாக்க முடியும்; டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மது ஊற்றிக்கொடுப்பவர்களை அரசு வேலையில் அமர்த்த முடியும்;  வேளாண் தொழில் செய்வோரை அரசுப் பணியாளராக்க முடியாதா?

 

நாம் தமிழர் ஆட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் மக்களுக்கு இலவசம்.  மக்களுக்கு அத்தியாவசியமான இதனைத்தவிர எந்த இலவசமும் கிடையாது. ‘ஆறுதலால் காயங்கள் ஆறாது; தூறல்களால் பயிர்கள் விளையாது; எம் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்’ என முழங்குகிறார் குன்றக்குடி அடிகளார். இந்த நாட்டில் சலுகை, போனஸ், மானியம் இதனைத்தவிர வேறு என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது? இன்றைக்கு வெங்காயம் விளையுயர்ந்துவிட்டதென எகிப்திலிருந்தும், இத்தாலியிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறார்கள். பாலைவனத்தில்கூட வெங்காயம் விளைந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. பாலைவனத்தில் விளையும் வெங்காயம் எம் பொன்விளைகிற மண்ணில் விளையாதா? ஏன் செய்யவில்லை. விவசாயிகளையெல்லாம் நிலத்தைவிட்டு வெளியேற்றிவிட்டார்கள்.

 

மாட்டுக்கறியை உண்ணக்கூடாது என்கிறார்கள். மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் பெருமுதலாளிகளில் மூவர் பார்ப்பனர்கள். எல்லோரையும் உண்ணக்கூடாது என்று சொல்லிவிட்டு அவர்களே ஏற்றுமதி செய்கிறார்கள். ஏனென்றால், மாட்டுக்கறிதான் அதிக இலாபத்தைப் பெற்றுத்தருகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் மாட்டுக்கறியை உண்டுவிட்டுத்தான் பயிற்சி செய்கிறார்கள். அதுதான் உடலுறுதியைத் தரும். ஜமைக்காவில் உசேன் போல்டு என்ற உடலுறுதி கொண்ட ஒரு வீரன் இருக்கிறான். அவன் ஒருவன் உடலுறுதிகொண்ட இளைஞர்கள் இங்கு இருக்கிறார்கள் என தன் நாட்டை அடையாளப்படுத்துகிறான்.

90 விழுக்காட்டினர் பால், கறி, முட்டையை உண்கிறார்கள். 100விழுக்காட்டு மக்கள் காய்கறியைத்தான் உண்ணுகிறார்கள். இதெல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது? கிராமப்புறங்களிலிருந்துதானே! அப்படியென்றால், சிற்றூர்களின் பொருளாதாரத்தை உயர்த்தாது எப்படி பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்? டென்மார்க் என்ற ஒரு நாடு ஆடு, மாடு மேய்த்தே உயர்ந்து நிற்கிறது. ஆனால், எல்லா வளமும் இருந்தும் நம் நாடு திருவோடு ஏந்தி தெருவோடு நிற்கிறது. தமிழர்களின் இயற்கைவளம் சுரண்டப்படுகிறது. தாமிரபரணி நதிக்கரை மண்ணை அள்ளிக்கொண்டு போய் ஒரு லாரி மணல் ஒரு இலட்சம் எனக் கேரளாவில் விற்கிறார்கள். அரை அங்குலம் ஆற்று மணல் வளர100 ஆண்டுகள் ஆகும் என்கிறது ஆய்வுகள். ஆனால், மக்களுக்கு குடிநீரைத் தருகிற  கிணற்றைச் சுற்றிக்கூட மணல் அள்ளப்படுகிறது.

ஐயா ஸ்டாலின் முதல்வராக ஆசைப்படுகிறார். ஜெயலலிதாவும் மறுமுறையும் ஆளத்துடிக்கிறார். இவர்கள் ஏன் மீண்டும் ஆள வேண்டும்? இதுவரை செய்யாத எதுவொன்றை இப்போது புதிதாக செய்யப்போகிறார்கள்? நல்லாட்சியைத் தருவேன் என்றால், இதுவரை ஏன் அதனை தரவில்லை? இலவசத்தை நாங்கள் விமர்சிப்போம் என்பதற்காக அதனை ‘விலையில்லாப் பொருள்’ என அழைக்கிறார்கள். அந்தப் பொருள்கள் மக்களுக்கு விலையில்லாமல் வருகிறது. அரசுக்குமா விலையில்லாமல் வருகிறது? அந்தப் பொருள்களைக் கொடுப்பதால் வரும் பொருளாதார இழப்பைச் சரிகட்ட என்ன செய்யப்போகிறார்களா? சாராயம் விற்கலாம் என்பதுதானே அரசின் திட்டம்.

ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கருணாநிதியின் மகன் என்பதைத்தவிர கூடுதலாக என்னத் தகுதியிருக்கிறது? மக்களின் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிக்கிறார். எழுதிவைத்து படிப்பவர் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும்? எங்கள் ஐயா ராமதாசும், அண்ணன் திருமாவளவனும்  25 ஆண்டுகள் அரசியல் செய்து கிடைக்காத அங்கீகாரம் வெறும் 7 ஆண்டுகளில் ஐயா விஜயகாந்த்க்கு கிடைத்திருக்கிறது. ஆனால், விஜயகாந்த் சட்டமன்றத்திற்குப் போவதில்லை. ‘சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால்தான் செல்வேன்’ என்கிறார். சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால்தான் சட்டமன்றத்திற்கு செல்வேன் என்று சொல்லியா விஜயகாந்த் வாக்கு கேட்டார்?

‘மண்ணின் புரட்சி தோன்ற வேண்டுமானால் முதலில் மக்களின் மனங்களில் தோன்ற வேண்டும்’ என்கிறார் ஐயா மு.வரதராசனார். அந்தப் புரட்சியை விதைப்பதற்காகவே உங்கள் பிள்ளைகள் வந்து நிற்கிறோம். எங்களிடம் சின்னம் இப்போது இல்லாததால் எங்கள் எண்ணங்களை விதைக்கிறோம்.  65 ஆண்டுகளாக திராவிட ஆட்சிக்கு முடிவுகட்ட உங்கள் பிள்ளைகள் களத்தில் நிற்கிறோம். தமிழனுக்கு கட்சி பகுதி, தொகுதி கட்சியாய் இல்லாது பொதுக்கட்சியாய் இருக்க வேண்டும் என 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுகிறோம். ‘தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நாங்கள் அரசியலை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இங்கு நடப்பது தன்னலம் சார்ந்த கொடுமையான சர்வாதிகாரம். அதனால்தான், ‘நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று’ என்று உங்கள் பிள்ளைகள் வந்தோம். பணம் வைத்திருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை உடைத்து, ‘எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள்’, ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம்’ என்பதை நிலைநாட்டத் துடிக்கிறோம். பாலுக்கு அழாத குழந்தை; கல்விக்கு ஏங்காத மாணவன்; வேலைக்கு அலையாத இளைஞன்’ இதுவே எனது கனவென்றான் பகத் சிங். அந்தக் கனவைக் கொண்டே உங்கள் பிள்ளைகளும் நிற்கிறோம். நாங்கள் சாதாரணமானவர்கள்; அசாதாரணத்தை மட்டுமே கனவு காணக்கூடியவர்கள் என்ற சேகுவேராவின் முழக்கத்தை முன்வைத்து தீய அரசியலை ஒழித்து தூய அரசியலை கட்டியெழுப்புகிறோம். இந்த மண்ணிற்கும், மக்களுக்குமான முதல் விடுதலை, கருணாநிதி, ஜெயலலிதாவிடமிருந்து எம் மண்ணையும், மக்களையும் மீட்பதுதான்.

முதலில் ஐம்பாதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த எம் தாய்மொழி தமிழ்மொழியின் மீட்சி; மொழி மீட்சியைக் கொண்டு சாதி, மத உணர்வைத் தகர்த்து தமிழ்த்தேசிய ஓர்மை; அந்த ஓர்மையைக் கொண்டு தமிழருக்கென ஒரு வலிமையான அரசியல்; அந்த அரசியலைக் கொண்டு தமிழருக்கென்று ஒரு அரசு; அந்த அரசைக் கொண்டு இறையாண்மையுள்ள ஒரு அரசாங்கம்; அதனைக் கொண்டு பரந்து விரிந்துக் கிடக்கிற பூமிப்பந்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமை கொண்ட ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்ற பெரும் கனவைச் சுமந்து அதனை அடைய வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி உயிரையே விலையாகக் கொடுத்து பன்னாட்டு அரசியலாக மாற்றி நிறுத்தியிருக்கிற தனித்தமிழீழ சோஷலிச குடியரசை அடைந்து தமிழருக்கென ஒரு தேசம் படைப்பதுதான் நமது உன்னத நோக்கம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

 

Leave a Response