நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே தொற்று குறைவான இடங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஜூலை 1 முதல் பள்ளிகள் தொடங்கும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், ”நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே தொற்று குறைவான இடங்களில் 9, 10 மற்றும் 12-ம் வகுப்புகளை ஜூலை 1 முதல் தொடங்கலாம். அதே நேரத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வகுப்புகள் தொடங்கும்.
எனினும், பள்ளிகளைத் திறக்கமுடியாத பகுதிகளில் கற்பித்தல் நிறுத்தப்படக் கூடாது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கற்பித்தல் நிகழ்த்தப்பட வேண்டும்.
1 மற்றும் 2-ம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் மற்ற மாணவர்களுக்கு அரசு வரையறுத்துள்ள நேர அட்டவணையின்படி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.