யாழ் மருத்துவமனையில் சிங்கள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆதிக்கம்

ஈழத்தில் எல்லாத்துறைகள் மற்றும் இடங்களிலும் சிங்கள மயமாக்கும் திட்டம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. உலகம் கவனிக்க மறந்திருக்கும் இந்த ஆபத்துக்கு மேலும் ஒரு ஆதாரமாக மதிமுக வைச் சேர்ந்த அருணகிரி, வடமாகாண உறுப்பினர் ஆனந்தியுடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி தெளிவாகக் காட்டுகிறது.

 

 

அருணகிரி: வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றதா?

ஆனந்தி: யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரி மட்டும்தான் இருக்கின்றது. அதிலும் கூட போருக்குப் பிற்பாடு சிங்கள மாணவர்களுக்குக் கூடுதலான அனுமதி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். போருக்கு முந்தைய காலத்தில் யாழ் மருத்துவர்கள் எங்கள் மக்களுக்குச் சிறந்த கடமை உணர்வுபூர்வமாகக் கடமை ஆற்றிக் கொண்டு இருந்தார்கள். போருக்குப் பிற்பட்ட காலத்தில் மொழி தெரியாத சிங்கள வைத்தியர்கள் அதிகமான அளவில் கொண்டு வந்து இறக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ் மருத்துவர்கள் தொலைவில் உள்ள சிங்களப் பிரதேசங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. திட்டமிட்ட அளவில், மிகச் சொற்பமான தமிழ் வைத்தியர்கள்தான் இப்போது வடக்கு மாகாணத்தில் இருக்கின்றார்கள்.

இப்பொழுது நான் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கின்றேன். அங்கே புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கின்ற சிங்கள வைத்தியர்களிடம் மக்கள் ஒரு வருத்தத்தைக் கூறுவதும், மொழி புரியாத மருத்துவர்கள் அதை வேறுவிதமாக விளங்கிக் கொள்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. தாதியர்கள் கூட சிங்களப் பெண்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களது அசமந்தப் போக்குகளையும் நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதுகூட எங்களுடைய மண்ணில் சிங்களவர்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற வகையில் ஒரு நீண்டகாலத் திட்டமாக இருக்கின்றது.

Leave a Response