தொழிலாளர் காங்கிரசுத் தலைவர் திடீர் மறைவு – மலையக மக்கள் சோகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று (மே 26,2020)திடீரென காலமானார்.

இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதிகளுள் ஒருவரான, ஆறுமுகன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி பிறந்தார்.

இவர் மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்காக அயராது உழைத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற ஆறுமுகன் தொண்டமான், 1990 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அரசியலுக்குள் பிரவேசித்தார்.

1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிதிச் செயலாளராகவும் 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.அன்று முதல் இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் மலையக மக்களின் நலனுக்காக ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்தும் அயராது உழைத்து வந்தார்.

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (மே 27) முற்பகல் 11 மணி மரை பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பின்னர் கொழும்பிலுள்ள அவரது இராஜகிரிய இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன் நாளை (மே 28) பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.

பின்னர் அங்கிருந்து றம்பொடையிலுள்ள அவரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையகத்திற்கு பேரிழப்பு எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response