ஒரேநாளில் 177 பேர் வேலைநீக்கம் – விகடன் குழுமத்தின் முடிவால் அதிர்ச்சி, போராட்டம்

94 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகநிறுவனம் விகடன் குழுமம். இந்நிறுவனம் கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி ஒரே நாளில் 177 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது.

உஞ்களில் யாருக்கெல்லாம் தொலைபேசி அழைப்பு வருகிறதோ அவர்கள் எல்லாம் வெளியேறத் தயாராகுங்கள் என்கிற அறிவிப்பினால் எல்லா ஊழியர்களுமே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

அதன்பின் 177 பேருக்கு தொலைபேசியில் அழைத்து நீங்களாக பதவிவிலகல் கடிதம் கொடுத்துவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இவர்களில் 87 பேர் நேரடியாக விகடன் குழும இதழ்களின் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர்கள். அவர்கள் தவிர புதிய செயலிக்கான குழு தொழில்நுட்பக்குழு என எல்லாப் பக்கங்களிலும் ஆட்குறைப்பு செய்திருக்கிறது விகடன் நிறுவனம்.

இது இதழியல் உலகில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பாரம்பரியம் மிக்க நிறுவனம் மூன்று மாத நெருக்கடிக்காக ஊழியர்களைக் கைவிடலாமா? என்று பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

இந்நிலையில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய விகடன் குழுமம் முடிவு செய்திருக்கிறது. இதனை எதிர்த்து போராட அனைத்து ஊடகவியலாளர்களையும் அழைக்கிறோம். அனைவரும் விகடன் அலுவலகம் முன் வரும் வெள்ளி அன்று காலை 10 மணியளவில் ஒன்றிணையுமாறு கேட்டு கொள்கிறோம் என்று பத்திரிகையாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அடையாளப்பூர்வமான அந்தப்போராட்டத்தில் பல பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டம் பல்வேறு வழிகளில் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Response