ஜெயலலிதா வீடு தொடர்பாக தமிழக அரசு அவசரச் சட்டம்

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்குப் பின், அதனை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி அறிவித்தார்.

தொடர்ந்து, சென்னை மாவட்ட வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தை அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக 2018-19-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது.இதன்மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகிறது.

Leave a Response