விஜயகாந்த், சு.சாமி சந்திப்பின் பின்னணி என்ன?

விஜயகாந்தை, அவரின் கட்சி அலுவலகத்தில், பாஜக  சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்துப் பேசினார்.

வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக்கொண்டு வலிமையான கூட்டணி அமைக்க திமுக திட்டமிடுகிறது. மறுபுறம் பா.ஜனதாவும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்குள் தக்க வைக்க வேண்டும் என கருதுகிறது.

தேமுதிக தரப்பில், தேர்தலில் போட்டியிட அதிக ‘சீட்’களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் யாருடன் கூட்டணி என்பதை முன்னரே தெரிவிக்காமல், வழக்கம்போல் முந்தைய தேர்தல்களில் கையாண்ட யுக்தியே இப்போதும் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில்தான்  விஜயகாந்த், திமுக விரிக்கும் வலைக்குள் விழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலும், அவரை தங்களது கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே  சுப்பிரமணியன் சுவாமி போன்ற ஊடகங்களால் கவனிக்கப்படும் ஒரு மேலிட தலைவரை அனுப்பி, விஜயகாந்தை சந்திக்க வைத்திருக்கலாம் பா.ஜனதா என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் சுப்பிரமணியன் சுவாமியே வலிய வந்து விஜயகாந்தை சந்திப்பதன் மூலம், அவரை தமிழக அரசியலில் தற்போதைக்கு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு பெரிய தலைவராக முன்னிறுத்தும் ஒரு யுக்தியாகவும் பா.ஜனதா இதனை மேற்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஏனெனில் விஜயகாந்தை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி,  “தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள். திமுகவுக்கு போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல்கள்  அமோகமாக நடந்து வருகின்றன . எனவே, தமிழகத்தில் மூன்றாவது சக்தியைத்தான் மக்கள் ஏற்பார்கள்” என்று கூறியதையும் முடிச்சுப்போட்டு பார்த்தால் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த திடீர் சந்திப்பின் பின்னணியை புரிந்துகொள்ளலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Response