தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடி

கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் தொடர்வண்டியும் மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

52 நாட்களுக்குப் பிறகு மே 12 ஆம் தேதி குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் தொடர்வண்டிகளை இயக்க இந்திய தொடர்வண்டித்துறை முடிவெடுத்துள்ளது. 15 தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

இவை புதுடெல்லி நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்கவான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி ஆகிய நகரங்களை இணைக்கும் வண்டிகளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்குக் கட்டுப்பாடு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் இருந்தபடி ஆலோசனையில் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்துக்கு 31 ஆம் தேதி வரை தொடர்வண்டி, விமான சேவைகளைத் தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.

மே 31 ஆம் தேதிவரை பொதுவான விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கக் கூடாது. 12 ஆம் தேதியில் இருந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு தொடர்வண்டிப் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. சென்னையில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால், 31 ஆம் தேதிவரை மாநிலத்துக்கு தொடர்வண்டிப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது.

இன்று மாலை 4 மணிக்கு புதுதில்லியிலிருந்து சென்னைக்கு ஒரு தொடர்வண்டி புறப்படவிருப்பதாகவும்,4.35 ம்ணிக்கு சென்னையிலிருந்து புதுதில்லிக்கு ஒரு வண்டி புறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response