ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க – சீமான் வலியுறுத்தல்

மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடக்கோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,,,

கொடிய கொரோனோ நுண்மிப் பரவல் காரணமாகத் தமிழகம் முழுவதும் நோய்த்தாக்கம் அதிகரித்துவரும் இவ்வேளையில் தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பதால் இந்த நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும் எனவே மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று நாடு முழுக்கச் சமூக ஆர்வலர்களும் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புகளும் குரலெழுப்பி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று அரசுக்கு நேற்று கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடக்கோரி ஈரோடு மாநாகராட்சி எஸ்.எஸ்.பி நகரில் தன் குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, அமைதியாக, வீட்டுக்கு வெளியில் பதாகை ஏந்தி அறவழியில் எளிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி பொறுப்பாளர் தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களை ஈரோடு மாநகரக் காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதாகவும், கொடும் சட்டப்பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

சனநாயக நாட்டில் மக்கள் நலனுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் போராட்டம் நடத்துவதும், எதிர்ப்பினைப் பதிவு செய்வதும் போன்றதான செயல்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் ஆகும்.

ஆளும் அதிமுகவைத் தவிரத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கருத்தோட்டத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. படித்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களில் பெரும்பான்மையோர் தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த போராடி வருகின்றனர்.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வருமானத்தை மட்டுமே குறிவைத்து தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பது சரியான செயலல்ல என்று எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக அமைதி வழியில் போராடிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ஈரோடு தமிழ்ச்செல்வனைக் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கருத்துரிமைக்கு எதிரான இந்தக் கொடுமை நடவடிக்கையினைத் தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அவர்கள் தனது எதேச்சதிகார நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ள தமிழ்செல்வனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் இதன் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

இல்லாவிடில் இன்று ஈரோட்டில் மட்டும் நடைப்பெற்ற போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழகம் முழுக்கப் பரவும் எனவும் அது தேவையில்லாத சட்ட ஒழுங்குச் சிக்கலை உருவாக்கும் எனவும் தமிழக அரசிற்கும், தமிழகக் காவல்துறைக்கும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறேன்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response