மதுக்கடைகள் திறப்பு – சென்னைக்கு மட்டும் தனி அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஊரடங்குத் தளர்வுகளுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் வரும் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என, தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. எனினும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும், தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்பு தெரிவித்தன.

இந்நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 5) வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 7 ஆம் தேதி அன்று திறக்கப்பட மாட்டாது. இந்தக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 3,550 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1,724 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response