மதுக்கடைகளில் குவிந்த கூட்டம் – கர்நாடக களேபரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் கர்நாடகம் முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. மது கிடைக்காத விரக்தியில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர்.

இது ஒருபுறம் இருக்க மதுக்கடை உரிமையாளர்களே, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறி வந்தன. மது கிடைக்காமல் திண்டாடிய மதுப் பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர். அதுபோல் கர்நாடகத்தில் தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு வந்தது. இதுதவிர கள்ளச்சாராயம் விற்பனையும் படுஜோராக நடந்து வந்தது.

இதனால் கொரோனா தடுப்புப் பணியில் இரவு-பகலாக ஈடுபட்டு வந்த காவல்துறையினருக்கு இந்த பிரச்சினை பெரும் தலைவலியைக் கொடுத்து வந்தது. மது போதைக்கு அடிமையான பலரும், கர்நாடகத்தில் மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முதல்வர் எடியூரப்பாவுக்கு ட்விட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வேண்டுகோளை விடுத்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு, தனியார் மொத்த விற்பனை கடைகள் மற்றும் அரசின் சில்லறை விற்பனை மதுக்கடைகளை திறக்க முன்வந்துள்ளது. அதாவது மே 4-ந்தேதி (இன்று) முதல் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 9 மணி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 39 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு கிடந்ததால் விரக்தியில் இருந்து வந்த மதுப் பிரியர்கள் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி நேற்று மாலையே பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மண்டியா, ராய்ச்சூர், பெலகாவி, யாதகிரி, ஹாவேரி உள்பட ஒரு சில இடங்களில் மதுக்கடைகள் முன்பு ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்ற படியும், தரையில் அமர்ந்தபடியும் இருந்ததைக் காண முடிந்தது.

இதற்கிடையே இன்று மதுக்கடை திறக்க உள்ளதால் மகிழ்ச்சியில் திளைத்த சாம்ராஜ்நகர் (மாவட்டம்) டவுனை சேர்ந்த ஒருவர், கர்நாடக அரசின் சில்லரை மதுபானக்கடையான எம்.எஸ்.ஐ.எல். கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் தனது முகத்தை முழுவதுமாக துணியால் மூடியபடி இருந்தார். அவர் தான் கையில் எடுத்து வந்த தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குகளை மதுக்கடை முன்பு வைத்தார். பின்னர் ஊதுவர்த்தி ஏற்றி சிறப்பு பூஜை செய்தார். பின்னர் தேங்காயைக் கடை முன்பு உடைத்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இதுபோல் கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டை தாலுகா பூதிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு வந்த 45 வயது மதுபிரியர் ஒருவரும் சிறப்பு பூஜை செய்து கற்பூரம் ஏற்றி தேங்காயை உடைத்து வழிபட்டார்.

கடை திறந்ததும் ஏராளமானோர் கூடிவிட்டனர்.எல்லாக் கடைகளிலும் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் செல்கின்றனர்.

Leave a Response