கொரோனா நிதி கொடுக்காமல் தொழிலதிபர்களுக்கு 68 ஆயிரம் கோடி கடன் இரத்து ஏன்? – மோடிக்கு காங்கிரசு கேள்வி

இந்திய ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று காணொலிக் காட்சி மூலம் செய்தியாள்ர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது…..

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற மே 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் (ஹாட்ஸ்பாட்) அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்கள் காத்து இருக்கிறார்கள்.

எனவே அதுபற்றி பிரதமர் மோடி விளக்க வேண்டும்.வெளிமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக என்ன நிதியுதவித் திட்டங்கள் அரசிடம் உள்ளன? என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.

அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த பதிலில், கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 50 பேரின் பெயர்களை ரிசர்வ் வங்கி தெரிவித்து இருப்பதாகக் கூறிய ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அவர்களுடைய பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களுடைய கடனை இரத்து செய்தது ஏன்? என்பதற்குப் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலங்களுக்குக் கொடுக்க மத்திய அரசிடம் பணம் இல்லை. ஆனால் தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை இரத்து செய்து இருக்கிறது என்றும் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

Leave a Response