‘தகர் வளர் துயர் தகர்’.(தகர் என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர்)


வடமாகாண கால்நடை அமைச்சின் தகர் திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தகர் என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும்.
இதனைப் பெயராகக் கொண்டு ‘தகர் வளர் துயர் தகர்’ என்ற தொனிப்பொருளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டமொன்றைக் கடந்த ஆண்டில் இருந்து செயற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாகவே தற்போது நல்லூர் மூத்தவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு யமுனாபாறி ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மூத்தவிநாயகர் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார்.
சங்கிலியன்தோப்பு மாதர் அபிவிருத்திச் சங்கத்தலைவி ம.புஸ்பமதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா.கஐதீபன், ச.சுகிர்தன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன், பிரதிப்பணிப்பாளர் வ.அமிர்தலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இத்திட்டத்துக்கான ஆடுகளை இலங்கையின் முதலாவது கிராமசபைத் தலைவி என்ற பெருமையுடன் நெடுந்தீவில் 1940களில் கிராமசபைத் தலைவியாகப் பணியாற்றிய அமரர் செல்லம்மா நாகேந்திரன் ஞாபகார்த்தமாக அவரது உறவினரான லண்டனில் வசிக்கும் செ.சுரேஸ் என்பவர் நன்கொடையாக வழங்கி வருகின்றார். அவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Response