வௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா? – பூவுலகின் நண்பர்கள் விளக்கம்

அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான ஒரு ஆய்வு முடிவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆய்வை நடத்திய புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி பிரக்யா டி யாதவ்,

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிடெரோபஸ் வவ்வால் மற்றும் ரூசெட்டஸ் வவ்வால் வகைகளை ஆராய்ந்தோம். அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் இருப்பது தெரிய வந்தது. எங்கள் ஆய்வை உறுதி செய்வதற்கு, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையும் நடத்தினோம். அதே நேரத்தில், கர்நாடகம், சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத், ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் இல்லை.

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் காணப்படுகிற “வவ்வால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்குத் தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் வவ்வால் மூலம் கொரொனா பரவுகிறது என்கிற ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு வவ்வால்களை அழிக்க வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள்.

இதைக் கண்டித்தும் வவ்வால்களின் தேவையை வலியுறுத்தியும் பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை…..

உலெகெங்கும் கொரோனா தொற்றுநோய் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று ‘விலங்குகளால்’ பரவும் நோய்கள் (Zoonoses) பேசுபொருளாகியிருக்கிறது. பழங்காலத்திலேயே தொற்று நோய்கள் இருந்தாலும் அவை பெருமளவு கொள்ளை நோய்களாய் உருப்பெறத்தொடங்கியது, மனிதன் விவசாயத்தைக் கைக்கொண்டு கூட்டமாக வாழத்தொடங்கிய பின்புதான். குடியிருப்புகளின் மக்கள் நெருக்கமும் சுகாதாரமின்மையும், உலகமயமாதல் போன்ற விஷயங்கள் தொற்றுநோய்கள் கூட்டம் கூட்டமாய் மனிதர்களைக் காவுவாங்கத் தொடங்கின.

காலநிலை மாற்றம் பனிப்பாறைகளில் உறைந்துகிடக்கும் வைரஸ்களைத் தட்டி எழுப்பபோகிறது என்று அறிவியலறிஞர்கள் எச்சரித்திருந்த நிலையில் இன்னொருபுறம் காடழிப்பும் நகர்மயமாதலும் மனித விலங்கு நெருக்கத்தை அதிகரித்து அதனால் பரவும் நோய்களையும் துரிதப்படுத்தியிருக்கிறது. இன்றும் மனித சமூகத்துக்குச் சவாலாக விளங்கும் எச்ஐவி உட்பட பல நோய்கள், சிம்பென்சிகள், வெளவால்கள், எலிகள் போன்ற விலங்குகளிடமிருந்தே மனிதனுக்குப் பரவியவை என்பது பொய்யல்ல. ஆனால் எப்போது மனிதன் அவற்றின் வாழிடத்தை ஆக்கிரமித்து நெருங்கினானோ அப்போதுவரை அவை மனித சமூகத்துக்கு அச்சுறுத்தலாயில்லை.

உயிரினங்கள் குறித்த சரியான புரிதலின்மையால் பாதிக்கப்படும் அப்பாவி விலங்குகளின் பட்டியல் மிக நீண்டது. ஆந்தைகள், பல்லிகள், பாம்புகள் என நீளும் அவற்றில் பாலூட்டிகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க அளவில் பெரும் அவப்பெயரை மக்களிடம் சந்தித்திருக்கும் ஒரு உயிரினம் வெளவாலாகத்தான் இருக்க முடியும். எத்தனையோ அறிவியல் தொழில்நுட்பத்தில் நம் சமூகம் முன்னேறியிருந்தாலும் இன்றும் சாலையைக் கடக்கும் பூனைகளும் சுவரில் இருக்கும் பல்லிகளும் தங்கள் வாழ்வின் நல்லது கெட்டதைத் தீர்மானிக்கின்றன என்று நம்பும் ஒரு சமூகத்தில் இவ்வுயிரினங்கள் சந்திக்கும் சிக்கல்கள் சொல்லிமாளாது. பெரும்பாலும் இரவில் வேட்டையாடுவதும், விநோதமான உருவமும், மனிதனுக்கு பரிச்சயமில்லாத தன்மையும் வெளவால்களுக்கு இத்தகைய அவப்பெயரைக் கொடுத்திருக்கக்கூடும்.

இவ்வுலகில் பயனற்ற உயிரினம் என்று எதையும் ஒதுக்கிவிடவோ ஒழித்துவிடவோ முடியாதபடி, மனித வாழ்வு ஒவ்வொரு உயிரினத்துடனும் நுட்பமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவாடிகளான வெளவால்களின் அளப்பெரிய சூழல் முக்கியத்துவத்தைத் தெரிந்த எவரும் இதை மறுக்க முடியாது. இயற்கையின் இந்த நுட்பமான வலைப்பின்னலை நவீன மனிதர்களைவிட நன்கு உணர்ந்தவர்கள் செறிந்த அறிவு கொண்ட நம் பழங்குடியினர்தாம். சுற்றுச்சூழல் ஆர்வலரான இரவீந்திரன் நடராஜன் அவர்கள் வெளவால்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் பளியர்கள் வெளவால்களை வளத்தின் குறியீடாகக் காண்பதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் அவர், மிகப்பெரும் எண்ணிக்கையில் அந்தி வானில் கூட்டமாகப் பறக்கும் வெளவால் காலனியை ஒரு குறிப்பிட்ட பருவத்தில் காணமுடியவில்லையென்றால் பளியர்கள் அதைச் சாபமாகக் கருதுவதாகச் சொல்கிறார். பளியர்களின் மரபு அறிவில் விழைந்த வெளவால்கள் குறித்த நம்பிக்கையை நாம் அறிவியல் மொழியில் இன்னும் சிறப்பாய் விவரிக்க முடியும்.

வெளவால்களில், உருவத்தில் பெரிய பழம்தின்னும் வெளவால்கள் மற்றும் உருவத்தில் சிறிய பூச்சியுண்ணும் வெளவால்கள் என உணவின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. பூச்சியுண்ணும் வெளவால்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஓரிடத்தில் நிலைகொண்டிருக்கும் வெளவால்கள் எத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் பூச்சிகளை உண்ணும் என்று எண்ணிப்பார்த்தாலே அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். அதுமட்டுமின்றி பகலில் நடமாடும் பூச்சிகளைப் பறவைகள் கட்டுக்குள் வைத்திருக்க, இரவாடிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வெளவால்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

அடுத்ததாக பழங்களை உண்ணும் வெளவால்கள், 500 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களின், குறிப்பாக இரவில் மலரும் சில தாவரங்களின் அயல்மகரந்தச் சேர்க்கைக்கும், விதைப்பரவலிலும் முக்கிய பங்குவகிக்கின்றன. இவற்றில் பல தாவரங்கள் வெளவால்கள் நுழைவதற்கென்றே அமைந்ததுபோன்ற விரிந்த பெரிய மணிவடிவிலான பூக்களைக் கொண்டுள்ளன. நம் நிலப்பகுதியின் முக்கிய பயிர்களான வாழை மற்றும் மாம்பழங்களின் மகரந்தச்சேர்க்கைக்குகூட வெளவால்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இவற்றில் எதையும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. உதாரணமாக மெக்சிகோவின் தனிப்பெருமைவாய்ந்த மதுபானத்தைத் தரும் கற்றாழைச் செடிகளின் மகரந்தச்சேர்க்கையில் வெளவால்களே முக்கியப் பங்குவகித்தன. ஆனால் சமீபகாலங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கற்றாழைகள் பூக்கும் பருவத்திற்கு முன்பே அறுவடைச் செய்யப்பட்டு விடுவதால் அப்பகுதியின் வெளவால்கள் பெருமளவில் அழிந்தன. இப்போது பெரும் பரப்பில் பரவியிருக்கும் கற்றாழைப் பண்ணைகளில் இருக்கும் அனைத்து கற்றாழைச் செடிகளும் ஆய்வுக்கூடங்களில் குளோனிங் முறையில் சில செடிகளிலிருந்து பெறப்பட்டவையே. எப்போது ஒரு இனத்தின் பல்வகைமை (Diversity) அழிகிறதோ அப்போது அவற்றின் நோய்தாங்கும் திறனும், பிழைக்கும் திறனும் குன்றி விடும் என்பது நாம் அறிந்ததே. சமீபத்தில் ஏற்பட்ட நோய்தாக்குதாலால் மெக்சிகோவின் கற்றாழைப் பண்ணைகள் பெருமளவில் அழிந்தன. மது உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. ஒருவேளை அவை வெளவால்கள் மூலமாக இயற்கையான அயல்மகரந்தச் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் கற்றாழைகளின் பல்வகைமையானது, பெரும் இழப்பிலிருந்து விவசாயிகளைக் காத்திருக்கும்.

இவ்வுலகின் பறக்கும் ஒரே பாலூட்டி உயிரினம் வெளவால்கள்தான். வெளவால்களில் உலகெங்கும் 950 க்கும் மேற்பட்ட உள் இனங்கள் உள்ளன. கொறி விலங்குகளுக்கு (Rodents) அடுத்ததாக அதிக உள்ளினங்களைக் கொண்ட பாலூட்டிகள் வெளவால்கள்தாம். எந்த பாலூட்டியும் வெளவால்களைப் போன்ற கேளா ஒலி (Ultrasonic sound) எழுப்பி அதன் எதிரொலிப்பு மூலம் இரைகொல்லும் பரிணாமத்தைப் பெறவில்லை. இவற்றின் பரிணாமச் சிறப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது இரவீந்திரன் நடராஜன் அவர்கள், இத்தனைச் சிறப்புத் தகவமைப்புகளைப் பெற்ற ஒரு உயிரினம் நிச்சயம் தனது வாழிடத்தின் ‘அதிமுக்கியத்துவம் வாய்ந்த உயிரினமாக’த்தான் (Key species) இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உயிரினத்தை நோய்ப்பரவலைக் காரணம்காட்டி அழிக்க முற்படுவது முட்டாள்தனமானது. வாழிட அழிப்பு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, பழத்தோட்ட உரிமையாளர்களால் கொல்லப்படுதல், ஓளிமாசு போன்றவற்றால் ஏற்கெனவே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளவால்களில் பல இனங்கள் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கின்றன. பழமுண்ணும் வெளவால்களில் பெரும்பாலானவை வருடத்துக்கு ஒரு குட்டி மட்டுமே ஈனுபவை. குறைந்த எண்ணிக்கையில் குட்டிகளை ஈனும் உயிரினங்கள் எப்போதும் விரைவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளவை.

இயற்கைக்கு மாறான ஒரு உயிரினத்தின் பெருக்கமோ இல்லை அழிவோ சூழலில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு நம்முன் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக தவளைகளின் வீழ்ச்சி மிதமிஞ்சிய கொசுக்களின் பெருக்கத்தையும் அவற்றின் மூலம் பரவும் நோய்களையும் கொண்டுவந்துள்ளது போன்று, நரிகளின் அழிவு மயில்களைப் பெருக்கி விவசாயப் பயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கின்றது. 1950களில் சீனாவில் அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் அந்த நாட்டின் உணவு உற்பத்தியை எவ்வளவு மோசமாக பாதித்து பல உயிர்களை நாம் இழக்க காரணமாக இருந்தது என்பதை வரலாற்றின் சுவடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வரிசையில் இன்று வெளவால்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அதன் விளைவுகள் எங்கெங்கு என்னவாறு இருக்கும் என்று நாம் கண்டறிவது எளிதானதல்ல. ஆனால் அது நிச்சயம் விரும்பத்தகாத விளைவாகத்தான் இருக்கும் என்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும்.

எபோலா வைரஸ் தொற்றுக்கு வெளவால்கள் காரணமாகச் சொல்லப்பட்டதுபோன்று இன்று கொரோனா தொற்றுக்குக்கூட வெளவால்களோ அல்லது அலங்குகளோ (Pangolin) காரணமாகச் சுட்டப்படுகின்றன. எப்படி சிம்பன்சிகளைக் கொல்வது எயிட்ஸ் பரவலைத் தடுக்காதோ அதேபோன்று வெளவால்களையோ அல்லது அலங்குகளையோக் கொல்வது எந்த தொற்றுப் பரவலையும் தடுக்கப்போவதில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் காடுகளையும் விலங்குகளையும் ஆக்கிரமித்து அவற்றுடன் கொள்ளும் இயற்கைக்கு மாறான தொடர்பைத் துண்டிப்பதுதான். அதுமட்டுமன்றி காட்டுயிர்களை வேட்டையாடுவதும், கடத்துவதும், உண்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மிகுந்த நெருக்கடியான இக்காலகட்டத்தில் அரசுகளும் பொதுமக்களும், எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதீத உணர்ச்சியின் அடிப்படையில் அல்லாது குறுகியகால மற்றும் நீண்டகால அளவில் சூழல்தாக்கங்களைக் கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டுமென்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு:- ஜியோ டாமின் 7708020668

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response