சிங்கள அதிபர் செய்தது தமிழ் மக்களுக்கு எதிரானது – ஐநா கண்டனம்

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக் காலத்தில் ஐந்து வயதுக் குழந்தை உள்பட எட்டுத் தமிழா்களைக் கொன்றது தொடா்பாக சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரத்னாயகே மீது வழக்குத் தொடரப்பட்டது. நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த 2015-இல் தீா்ப்பளித்தது. கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிங்களருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு சிங்கள அதிபா் கோத்தபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தாா்.

நான்கு சிறுவா்கள் உள்பட எட்டுத் தமிழா்களைக் கொன்ற இலங்கை இராணுவ வீரருக்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் மிஷெல் பாட்செலட் கூறியுள்ளதாவது….

கடந்த 2000-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப் போரின் போது நான்கு சிறுவா்கள் உள்பட எட்டுத் தமிழா்களைக் கொன்ற இலங்கை இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்ததுடன், அவருக்கு பொதுமன்னிப்பு அளித்து இலங்கை அரசு விடுதலையும் செய்துள்ளது.

இலங்கை அதிபா் வழங்கியுள்ள மன்னிப்பு பாதிக்கப்பட்டவா்களுக்கு எதிரானது. சா்வதேச மனித உரிமை, கடமைகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதற்கு இது மற்றுமோா் எடுத்துக்காட்டு என்றாா் அவா்.

Leave a Response