மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு – என் டி ஏ அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதன்படி, 2020-21-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி முதல் அதே மாதம் 31-ந்தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 இலட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

விண்ணப்பித்தவர்களுக்கான ‘ஹால்’ டிக்கெட் நேற்று வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நேற்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் எதிர்பார்த்துக் காத்து இருந்தனர்.

ஆனால் தேசிய தேர்வு முகமை மே மாதம் நடை பெறுவதாக அறிவித்த தேர்வை ஒத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் வினித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வுக்குத் தயாராவதில் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மே மாதம் 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

3-ந்தேதிக்கு பதில் மே மாதம் இறுதி வாரத்தில் நீட் தேர்வு நடைபெறும். சூழ்நிலையைப் பொறுத்து புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்கு இன்று வெளியிடப்பட இருந்த ஹால் டிக்கெட் ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும்.

தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கவலைப்படாமல், இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள தகவல் ஒவ்வொரு தேர்வரின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மாணவர்கள் ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் தொடர்ந்து கவனித்து வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 87000 28512, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response