ஊரடங்கு முன்கூட்டியே தளர்த்தப்பட்டது பேருந்துகள் ஓடுகின்றன – இங்கல்ல சீனாவில்

சீனாவில் வூகான் நகரைத் தலைமை இடமாகக் கொண்ட ஹூபே மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கிறார்கள். வூகானில் மட்டும் 1 கோடியே 10 இலட்சம் பேர் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக இந்த மாகாணம் முடங்கிப்போனது.

9 வாரங்களாக அங்கு ஊரடங்கு அமலில் இருந்தது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதிவரை நீடித்து இருந்த ஊரடங்கு நேற்று தளர்த்தப்பட்டது.

ஜனவரி மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு நேற்று வூகான் நகரில் 30 விழுக்காடு அதாவது 117 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சுகாதாரப் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் இருந்தார். அவர் பயணிகளைச் சோதனை செய்த பிறகே பேருந்தில் ஏற அனுமதித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதைக் காட்டும்விதமாக ஒவ்வொருவருக்கும் பச்சைநிற சுகாதார அட்டை வழங்கப்பட்டு இருந்தது. ஸ்மார்ட் போன் வைத்து இருந்தவர்கள் அதன்மூலம் அதைக் காட்டிய பிறகே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் சுகாதார அட்டையை காண்பித்து பேருந்தில் ஏறினார்கள்.

தற்போது ஹூபே, வூகான் நகரங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 4 பேர் உயிர் இழந்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Response