கொரோனா பாதிப்பு தமிழகத்தில் முதல் மரணம் – எப்படி நடந்ததென அமைச்சர் விளக்கம்

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரை கடந்துள்ள கொரோனா பாதிப்பில் உள்ளவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் உயிரிழப்பு இருந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இரண்டாம் நிலையில் இருக்கும் இந்தியா, தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் மூன்றாம் நிலையான சமுதாயப் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 18 பேரில் 16 பேர் வெளியூரிலிருந்து வந்தவர், ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர்.

ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர். முதன்முறையாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெளியூரிலிருந்து வராமல் உள்ளூரில் வசித்து வந்த 54 வயது நபர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருந்த அந்த நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். கொரோனா வைரஸ் வயதானவர்களை அதிகம் பாதிக்கும், அதிலும் கரானிக்கல் வகை நோய்த்தொற்று உள்ளவர்களை தீவிரமாக பாதிக்கும்.

நீரிழிவு நோய், சுவாசக்கோளாறுகள், கிட்னி மாற்று சிகிச்சை, கிட்னி பாதிப்பில் உள்ளவர்கள் போன்றவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது தீவிரமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் நீரிழிவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்தும் நேற்று மாலை முதல் அவரது உடல் சிகிச்சைகளை ஏற்க மறுக்கிறது தீவிரமாக அவரது உயிரைக் காக்க மருத்துவர்கள் போராடுகிறார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மதுரை நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வராமல் உள்ளூரில் மதுரை அண்ணா நகரில் வசித்த அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்று அனைவரும் கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று இதற்கு அமைச்சர் பதிலளித்தார்.

தாய்லாந்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்துள்ள நபர்களுடன் மதுரை நபர் பழகியுள்ளதை விசாரணையில் கண்டுபிடித்துவிட்டோம், அவருடன் தொடர்பிலிருந்த மற்றவர்களையும் தனிமைப்படுத்திவிட்டோம் எனவே எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவருக்கு திடீரென வைரஸ் தொற்று ஏற்பட்டது என பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பினால் இதுவரை உயிரிழந்த அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே. மதுரையில் உயிரிழந்த நபர் 54 வயதானவர். நீரிழிவு ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனா தொற்றும் ஏற்பட்டதால் மேலும் உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 18 அதில் உயிரிழந்தவர் ஒருவர் என்பது தற்போதைய நிலையாக உள்ளது.

Leave a Response