பாலிவுட் பாடகியின் இரவுவிருந்தால் பாராளுமன்றம் வரை வந்த கொரோனா – பாஜக அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வெளிநாடுகளுக்குச் சென்று வரும் பயணிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, லண்டன் சென்றிருந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் லக்னோ விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு சோதனைக் குறைபாட்டைப் பயன்படுத்தி பரிசோதனைகளில் இருந்து தப்பியுள்ளார்.

மேலும், இலண்டன் சென்று வந்ததை மறைத்து லக்னோவில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். இப்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனிகா கபூர் குடும்பத்துடன் வசித்துவரும் அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் அப்பகுதி முழுவதையும் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனிகா கபூர் நடத்திய பார்ட்டியில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜெ, அவரது மகனும் பா.ஜ.க எம்.பியுமான துஷ்யந்த் சிங், உத்தர பிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதால், அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். வசுந்தரா ராஜெ, துஷ்யந்த் சிங் உள்ளிட்ட பலரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அந்த பார்ட்டியில் பங்கேற்ற பா.ஜ.க எம்.பி. துஷ்யந்த் சிங், கடந்த சில நாட்களாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எம்.பிக்களுக்கான சிறப்பு விருந்திலும் பங்கேற்றுள்ளார். இதனால், அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் துஷ்யந்த் சிங்கை சந்தித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங். எம்.பி டெரிக் ஓ’பிரையன், பா.ஜ.க எம்.பி வருண் காந்தி, அப்னா தள் எம்.பி அனுப்ரியா படேல் ஆகியோரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பரிசோதனையிலிருந்து தப்பிய ஒருவர் மூலம், முக்கிய அரசியல் பிரபலங்கள் வழியாக, நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை வரை கொரோனா அச்சம் தீவிரமடைந்துள்ளது. இதனால் பா.ஜ.க அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், அமைதி காத்த பா.ஜ.க அரசு இந்தச் சூழலை எதிர்கொள்ள வழியற்றுத் திகைத்துள்ளது.

Leave a Response