தமிழர்களின் சொத்து சித்தமருத்துவம், அதை எல்லோரும் பயன்படுத்தவேண்டும்

குறைந்த செலவில் கிடைக்கும் சித்த மருத்துவத்தை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்று, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
சித்த மருத்துவ முப்பெரும் விழா சென்னையில் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்றது. இதில், உலக சித்த மருத்துவ அறக்கட்டளையைத் தொடக்கி வைத்து ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழர்கள் உலகிற்கு மிகப் பழைமையான தமிழ் மொழியை மட்டும் கொடுக்கவில்லை, மிகச் சிறந்த சித்த மருத்துவத்தையும் வழங்கியுள்ளனர். சித்த மருத்துவமானது பல்வேறு தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த வல்லது. அதேபோன்று டெங்கு போன்ற காய்ச்சலுக்குத் தீர்வாக அமைகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவியபோது நிலவேம்பு, மலைவேம்பு, பப்பாளி போன்றவற்றின் மருத்துவப் பயன் கொண்டு சித்த மருத்துவப் பொருள்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு காய்ச்சலில் இருந்து மக்கள் தப்பிக்க வாய்ப்பாக அமைந்தது. தமிழகத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட 1,047 இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சித்த மருத்துவ முறையானது பாதுகாப்பானதாகும், செலவும் குறைவாகும். இருப்பினும் மக்களிடம் சித்த மருத்துவம் பிரபலமடையாமல் உள்ளது.
இதைப் போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் சென்னையில் தொடங்கப்பட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி, கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.53 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், சித்த மருத்துவத்துக்கான WWW.SiddhaMD.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

Leave a Response