வைகை நதி சாக்கடை ஓடும் நதியாகிவிட்டது- பழ.நெடுமாறன் வேதனை

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள நீராதாரங்களை மீட்டெடுக்க விவசாயிகளுடன் இணைந்து பொதுமக்களும் போராட வேண்டும் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.
கோவை சின்னியம்பாளையத்தில் கொங்கு மண்டல நீர்வழிப்பாதை மீட்பு, விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பழ.நெடுமாறன் பேசியதாவது:
சங்க இலக்கியங்களில் புகழ்பெற்ற நதியாக விளங்கிய வைகை நதி இன்று சாக்கடை ஓடும் நதியாக மாறிவிட்டது. இதில், தற்போது வரை வற்றாத ஜீவநதியாக ஓடிவரும் தாமிரவருணியின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. உலகின் மிகவும் தொன்மையான மலைகளில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சிமலை காடுகள் அழிப்பு, நீராதாரங்கள் சிதைப்பு, கனிமவளங்கள் வெட்டி எடுப்பு ஆகியவற்றால் சிதைந்து வருகிறது. கடந்த 1958-ஆம் ஆண்டு தமிழக-கேரள அரசுகளால் ஆழியாறு-பரம்பிக்குளம் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக 8 அணைகள் கட்டப்பட்டு கொங்கு மண்டலத்தில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதையடுத்து, 1988-ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒப்பந்தப்படி, இத்திட்டத்தை விரிவுபடுத்த கேரள அரசு மறுத்து வருகிறது. பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்தவும் கேரளம் மறுக்கிறது. கொங்கு மண்டலத்தின் பாசன வசதியை அழிக்கும் விதமாக அமராவதியின் துணை நதியான பாம்பாற்றிலும், கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அட்டப்பாடி ஆற்றின் குறுக்கே அணை கட்டவும் கேரள அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபனையின் விளைவாக தற்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டாலும் அந்த அபாயமும் இன்னமும் தொடர்கிறது. காவிரி பிரச்னையில் கர்நாடகமும் நமக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
கேரளத்திலிருந்து அரபிக் கடலில் 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் நாம் கேட்பதோ 100 முதல் 150 டிஎம்சி தண்ணீர் தான். நொய்யலை மீட்டெடுக்க சரியான நேரத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை மீட்டெடுக்க விவசாயிகளுடன் சேர்ந்து பொதுமக்களும் போராட முன்வர வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:
கடந்த 25 ஆண்டுகளில் மக்கள் தொகை உயர்ந்து தற்போது 125 கோடியை எட்டும் வேளையில் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் பரப்பளவு பாதியாகக் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழகத்தில் 32,202 ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன. இதில், 5 ஆயிரம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டன. தாமிரவருணி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளின் நீர் வழிப் பாதைகள் ஆக்கிரமிப்புகளை மீட்கப் போராட வேண்டும் என்றார்.

Leave a Response