செய்தியாளரிடம் சீறிய விராட் கோலி – நியூசிலாந்தில் சர்ச்சை

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்துநாள் போட்டித் தொடரை முழுமையாக இழந்த பிறகு இந்திய அணித் தலைவர் விராட்கோலி அளித்த பேட்டியில்….

இந்தத் தோல்விக்கு சாக்கு போக்கு எதுவும் சொல்ல முடியாது. வெளிநாட்டு மண்ணில் நாம் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் தாக்குதலை தொடுக்கும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டு ரன்கள் சேர்க்கவில்லை. நாங்கள் விரும்பிய ஆட்டத்தை இங்கு எங்களால் விளையாட முடியவில்லை. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வருங்காலத்தை நோக்கி நகர வேண்டும். எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் போதுமான அளவுக்குத் தீவிரமாகச் செயல்படவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் நெருக்கமாகச் செயல்பட்டோம். நியூசிலாந்து அணியினர் அதிக நெருக்கடி அளித்தனர். அவர்கள் தங்களது திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினார்கள். ஆனால் நாங்கள் எங்களுடைய திட்டத்தைத் துல்லியமாக அமல்படுத்த முடியவில்லை. இதுவே இரு அணிக்கும் உள்ள வித்தியாசமாகும்.

இந்தத் தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நமது தவறுகளைச் சிந்தித்து சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். ‘டாஸ்’ தோற்றது நமக்கு பாதகம் என்றாலும், அதனை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. 2 டெஸ்ட் போட்டியிலும் ‘டாஸ்’ எதிரணி பவுலர்களுக்கு கூடுதல் சாதகமாக அமைந்தது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு நாளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். இதனை பேட்டிங் வரிசையாக நாங்கள் செய்யத் தவறிவிட்டோம். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தமட்டில் மனதளவில் உறுதியாக இருந்தால் தான் ஷாட்களை நேர்த்தியாகத் தேர்வு செய்து விளையாட முடியும். ஆடுகளம் மற்றும் சூழ்நிலை குறித்து அதிகம் சிந்திக்கக்கூடாது. ஒரு அணியாக ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். தனிப்பட்ட யாருடைய ஆட்டத்தையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை என்று விராட்கோலி கூறினார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டம் இழந்த போது விராட்கோலி ஆக்ரோஷமாக ரசிகர்களை நோக்கி சைகை செய்ததை அந்த நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் விராட்கோலி கோபம் அடைந்தார்.

அப்போது அவர் பதில் அளிக்கையில், ‘இதற்குப் பதில் வேண்டும் என்றால் நீங்கள் இன்னும் நல்ல கேள்வியுடன் வர வேண்டும். அரை குறை கேள்வி, அரைகுறையான விவரங்களுடன் நீங்கள் இங்கு வந்து இருக்கக்கூடாது. இதனை நீங்கள் சர்ச்சையாக்க விரும்பினால் அதற்குரிய இடம் இதுவல்ல. நடந்த சம்பவம் குறித்து நான் ஆட்ட நடுவரிடம் பேசிவிட்டேன். நடுவரும் பிரச்சினை எதுவுமில்லை என்று தெரிவித்து விட்டார்’ என்றார்.

வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

‘உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவை வீழ்த்தியது மிகுந்த திருப்தி அளிக்கிறது. இது எங்கள் அணியின் சிறப்பான செயல்பாடாகும். பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்தது. ஜாமிசன் பங்களிப்பு சிறப்பானதாகும். 2-வது இன்னிங்சில் இந்திய அணி மேலும் 50 ரன்கள் எடுத்து இருந்தால் இலக்கை எட்டிப்பிடிப்பது கடும் சவால் நிறைந்ததாக இருந்து இருக்கும். நான் ஆட்டம் இழந்த போது கோலி நடந்து கொண்ட விதம் குறித்துக் கேட்கிறீர்கள். அது கோலியின் இயல்பாகும். அவர் ஆட்டத்தை அவ்வளவு அனுபவித்து விளையாடுகிறார். இதில் பெரிதுபடுத்த ஒன்றுமில்லை’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response