டி 20 இழந்ததற்காக கடுமையாகப் பழி தீர்த்த நியூசிலாந்து

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைச் சுவைத்தது. அதன்பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணிக்குப் பதிலடி கொடுத்தது.

இந்திய -நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஐந்துநாள் போட்டியின் மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் 2 ஆவது ஐந்துநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 242 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ப்ரித்வி ஷா, புஜாரா, விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதன்பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 235 ரன்னில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதன் பின்னர் தொடங்கிய இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சொதப்பியது. தொடக்கம் முதலே இந்திய அணி தனது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த புஜாரா அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் அட்டாக்கிங் பந்துவீச்சால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றிபெற 132 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக லாதம் மற்றும் ப்ளண்டெல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இந்த அணி ஒரு கட்டத்தில் அதிரடிக்கு மாறியது. இதனால் நியூசிலாந்து அணிக்கு ரன் சேர்ப்பது எளிதானது. மறுபக்கம் இந்திய அணியினர் நியூசிலாந்து அணியின் விக்கெட்டை வீழ்த்துவதிலோ, அவர்கள் ரன் சேர்ப்பதைத் தடுப்பதிலோ தவறிவிட்டது. இறுதியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Leave a Response