பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மு.க.ஸ்டாலின் வேதனை

உடல் நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்றும் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோரும் உடன் சென்றனர். க.அன்பழகனின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஸ்டாலினிடம் மருத்துவர்கள் எடுத்துக் கூறினர்.

திமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று அன்பழகன் குடும்பத்தினரிடம் உடல்நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், மார்ச் 1 ஆம் தேதி தனக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க வர வேண்டாம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…..

திமுக பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மார்ச் 1 ஆம் தேதி எனது பிறந்தநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை. எனவே, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன்காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட அன்பழகன் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response