ஒரு பக்கம் வாணவேடிக்கை இன்னொரு பக்கம் துப்பாக்கிச்சூடு – பதட்டத்தில் டெல்லி

தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை மறித்துள்ளதால், மாற்று இடத்திற்கு சென்று போராட்டத்தைத் தொடர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்காக போராட்டக்காரர்களுடன் பேச சமரசக்குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டனர். ஆனால், இந்தகுழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் அங்கு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஷாகீன்பாக்கை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கு திடீரென போராட்டம் பரவத் தொடங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர், மவுஜ்பூர் பகுதிகளை யமுனா விகாருடன் இணைக்கும் சாலையில் 1000 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் சனிக்கிழமை இரவு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் இடம் அருகே உள்ள மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும், அதனை ஆதரிப்பவர்களுக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. குறிப்பாக, உள்ளூரைச் சேர்ந்த பாஜ பிரமுகரும் முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சருமான கபில் மிஸ்ரா, சிஏஏ சட்டத்தக்கு ஆதரவாக அதே பகுதியில் ஆதரவு பேரணிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் கூடினர். அப்போது, நண்பகலில், கபில் மிஸ்ரா தலைமையிலான சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மோதிக்கொண்டனர். இருதரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடம் போர்களம் போனறு காட்சியளித்தது. இதையடுத்து அங்கு போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களை துரத்தி அடித்தனர்.

இந்நிலையில், டெல்லியின் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து, வடக்கு மற்றும் தெற்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் சில பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பது தொடர்பானது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரை நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கவும். அமைதியும் நல்லிணக்கமும் பேணப்படுவதை உறுதிசெய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்தியப் பயணம் நடக்கும் இவ்வேளையில் டெல்லியில் நடக்கும் இந்த வன்முறை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்கிறார்கள்.

Leave a Response