சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குறித்து வைகோ அறிக்கை

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்தப் பெயரை மாற்றக் கூடாது என்றும் புதிய மருத்துவக் கல்லூரியை கடலூரில்தான் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளுள் ஒன்றான, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், செட்டிநாட்டு அரசர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலட்சக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவித்து, பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, உலக அளவில் தமிழகத்திற்கு மதிப்பைத் தேடித்தந்த கல்விக்குழுமம் ஆகும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை அழைத்துப் பேச வைத்துப் பெருமை சேர்த்து, மாணவர்கள் இடையே பகுத்தறிவுக் கொள்கைகள் வேர் ஊன்றச் செய்தது, திராவிட இயக்கத்தின் நாற்றங்காலாகத் திகழ்ந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான் என்றால் அது மிகை ஆகாது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தில் ஆற்றிய பல சொற்பொழிவுகள்தான், மாணவர்கள் இடையே அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது; மொழி உணர்வை விதைத்தது, மொழிப்பற்றை வளர்த்தது. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் களம் அமைத்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான்.

தமிழ் மொழியையும், தமிழ் இசையையும் வளர்ப்பதற்கு, அண்ணாமலை அரசரைப் போல் ஆதரவு அளித்தவர்கள் எவரும் இல்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள்தான், இன்றைக்குத் தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக, பல்துறை விற்பன்னர்களாக மிளிர்கின்றார்கள். தமிழகம் முழுமையும் கல்லூரிகளில் பேராசிரியர்கள், முதல்வர்கள், துணைவேந்தர்கள் எனப் பொறுப்பு வகித்து, கல்வித்துறையை மேம்படுத்தி வருகின்றார்கள்.

உறவினர்கள் மற்றும் நகரத்தார் சமூகத்தவர் எல்லோரும், கல்லூரியை மதுரையில்தான் நிறுவ வேண்டும் என வலியுறுத்தியபோதிலும், அண்ணாமலை அரசர் அவர்கள், சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியை நிறுவினார். அதுவே, 1929 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருப்பெற்றது. அதன் விளைவாகவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் பெருந்துணையாக இருந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

பல்வேறு காரணங்களைக் கூறி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. அப்போது அங்கே 12582 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களுள், 5000 க்கும் மேற்பட்டவர்களைத் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பணி இடமாற்றம் செய்து விட்டனர்.

செட்டிநாட்டு அரசரின் பொறுப்பில் இருந்தபோது, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மானியம் ஆண்டுக்கு 60 கோடிதான். ஆனால், அப்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் அந்தப் பல்கலைக்கழகத்தை நடத்தி வந்தார்கள்.

இப்போது, பல்லைக்கழக மானியக்குழு வழங்குகின்ற நிதி உதவி ஆண்டுக்கு ரூ 225கோடி. ஆயினும், வேலைவாய்ப்புகளைக் குறைத்து விட்டனர். இப்போது அங்கே 7100 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

அண்ணாமலை அரசருக்கு அடுத்து, பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகப் பொறுப்பு வகித்த இராஜா முத்தையா அவர்கள், பல்வேறு துறைகளைத் தொடங்கினார். அயல்நாடுகளில் இருந்தும் பேராசிரியர்களை வரவழைத்துப் பணியில் அமர்த்தினார். ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவை, பின்னர் அவரது மகன் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் இணைவேந்தராகப் பொறுப்பு வகித்த காலத்தில், 1985 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்கள். தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக ஆக்கினார். முதுகலைப் பட்ட வகுப்புகளையும் தொடங்கினார். இன்று, அதிக அளவில் முதுகலை மாணவர்கள் அங்கேதான் படித்து வருகின்றனர். இராஜா சர் முத்தையா அவர்கள் பெயரால் இயங்கி வருகின்ற அந்த மருத்துவக் கல்லூரியையும் தமிழக அரசு எடுத்துக்கொண்டது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையைத் தமிழக அரசு வகுத்துச் செயல்பட்டு வருகின்றது. அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கப் போவதாக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக, அங்கே ஏற்கனவே ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத் தலைநகரங்களில்தான், அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், கடலூர் மாவட்டத்தில் மட்டும், ஒரு வட்டத் தலைநகரான சிதம்பரத்தில் இயங்கி வருகின்ற இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப் போவதாக. சட்டப்பேரவையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி,ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியில் கி.ஆ.பெ. விÞவநாதம் மருத்துவக் கல்லூரி என்ற பெயர்களில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பது போல், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதை மாற்றக் கூடாது.

மேலும், கடலூர் மாவட்டத்திற்கான புதிய மருத்துவக் கல்லூரியை, மாவட்டத் தலைநகரான கடலூரில்தான் தொடங்க வேண்டும். அதன்மூலம், கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

அதற்கு மாறாக, செட்டிநாட்டு அரசரின் பெயரையும், புகழையும் மறைக்கின்ற முயற்சியை ஏற்றுக்கொள்ள இயலாது; எந்தக் காரணத்தைக் கொண்டும், இராஜா முத்தையா அவர்களின் பெயரை நீக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்துகின்றேன். அத்தகைய முடிவினை அரசு மேற்கொண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
24.02.2020

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response