ஆர் எஸ் எஸ் சார்ந்த அமைப்புக்கு 600 கோடி தாரை வார்த்த தமிழக அரசு – கடும் விமர்சனங்கள்

‘அட்சய பாத்திரம்’ என்ற அறக்கட்டளை, இந்தியாவில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் படிக்கும் 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவை வழங்கி வருகிறது.

அதுபோல அந்த அறக்கட்டளை, சென்னை திருவான்மியூரில் சமையல் கூடத்தை அமைத்து 16 மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் அளித்து வருகிறது. தற்போது இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் மேலும் பல மாணவர்கள் பயனடையும் வகையில் அதை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

அதற்காக, 12 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க வசதியாக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலும், 15 ஆயிரம் மாணவர்களுக்கு சமையல் செய்ய வசதியாக பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலும் தலா ஒரு சமையல் கூடத்தை அட்சய பாத்திரம் அறக்கட்டளை அமைக்க இருக்கிறது. அதற்கான இடத்தை அந்த அமைப்புக்கு சென்னை மாநகராட்சி குத்தகையாக வழங்கி இருக்கிறது.

அந்த 2 சமையல் கூடங்களை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று கிரீம்ஸ் சாலையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சமையல் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில்,ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், டாக்டர் சரோஜா, பாண்டியராஜன் அட்சய பாத்திரம் அமைப்பின் தலைவர் மது பண்டிட் தாசா, துணைத் தலைவர் சஞ்சலபதி தாசா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

மாணவர்களுக்கு உணவளிப்பது, தேசத்தின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதற்கு இணையானது. அதிலும், உடல் நலனுக்குக் காலை உணவு மிகவும் அவசியமானது. காலை உணவு சாப்பிடாத குழந்தைகளால் வகுப்பில் பாடங்களைக் கவனமுடன் கற்க முடியாது. இதுபோன்ற உன்னதமான நோக்கத்துக்கு இடமளித்த தமிழக அரசு, சென்னை மாநகராட்சியைப் பாராட்டுகிறேன்.

வசதி குறைவான மாணவர்களும் கல்வியில் சிறக்க வேண்டும். எனவேதான் இந்தத் திட்டத்துக்கான சமையல் கூடம் மற்றும் பல்வேறு தளவாடங்களை அமைக்க கவர்னரின் விருப்புரிமை நிதியாக ரூ.5 கோடியை இந்த அமைப்புக்கு வழங்கி இருக்கிறேன்.

ஏழை மாணவர்களின் கல்விக்குத் தமிழக கவர்னர் மாளிகை தொடர்ந்து உதவி செய்யும். இந்தத் திட்டத்தை தமிழகத்தின் நகர்ப்புற, ஊரக மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆரால் 1982-ம் ஆண்டு சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தொடங்கியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இத்திட்டத்திற்கு மேலும் மெருகேற்றி, சத்துணவில் வழங்கப்படும் உணவு வகைகளை மாற்றியமைத்து, கலவை சாதங்கள் உள்ளிட்ட 13 வகையான உணவுகளுடன் மசாலா முட்டைகளும் வழங்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சத்துணவு திட்டத்தினை செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தனியாக நிர்வாக அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்கள் மூலம் சுமார் 50 லட்சம் மாணவ, மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.

ஏழை, அடித்தட்டு மக்களுக்கும் பசியில்லா நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா உணவகம் திட்டம் கொண்டு வரப்பட்டு, மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியோர்களுக்கு கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஏழைக் குழந்தைகள் தங்களது கல்வியைத் தொடர பசி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு ‘அட்சய பாத்திரா’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள 24 மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 5,785 மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்த காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு கிரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், முறையே 12 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சியுடன் இந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.

சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களிலேயே சமையல் கூடங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு குடிநீர், மின் இணைப்பு மற்றும் மின்சாரக் கட்டணத்தையும் சென்னை மாநகராட்சியே செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. கிரீம்ஸ் சாலையில் அமையும் சமையல் கூடத்திற்கு உண்டான செலவினத்திற்கு கவர்னர் தனது விருப்புரிமை நிதியின் மூலம் நிதி உதவி வழங்கியுள்ளதற்கு எனது பாராட்டுகள்.

அட்சய பாத்திரா என்ற இந்த நிறுவனம், சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பசியின்றி படிப்பைத் தொடர, உங்களது காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

இன்று நான் முதலமைச்சராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த நன்நாளில், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் சமையல் கூடங்கள் அமைக்க நடத்தப்படும் பூமி பூஜை விழா என்ற ஒரு அன்னதானம் வழங்குதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வு கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இது பற்றிக் கூறப்படுவதாவது….

நேற்று முதல்வர் எடப்பாடியால் சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் 20,000 சதுர அடி அரசு நிலம் இஸ்கான் ( பழைய பெயர்: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ) அமைப்புக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. (இந்த இயக்கம்தான் RSS இன் சர்வதேச ஏஜென்ட் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. )

அங்கே அவர்கள் ஒரு சமையலறை கட்டி கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு இலவசமாக கொடுக்கப் போகிறார்கள். ( இஸ்கானில் வழங்கப்படும் உணவில் வெங்காயம் , பூண்டு எதுவும் கண்டிப்பாகச் சேர்க்கப்படாது)

இதற்காக முதல்கட்டமாக கவர்னர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்

முதலமைச்சர் மேலும் ஒரு 35 ஆயிரம் சதுர அடி உள்ள இடத்தை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்

மாணவர்களுக்கு காலை உணவு கொடுப்பது நல்ல விஷயம் தான்

அதை ஏன் இஸ்கான் மூலம் கொடுக்க வேண்டும்

அதற்கு ஏன் இத்தனை prime property நிலங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்

ஏற்கனவே இருக்கும் சத்துணவுத் திட்டத்தின் கட்டமைப்பை பயன்படுத்தி அந்தந்த பள்ளிகளிலேயே கொடுத்து விடலாம்.
——-
பின்குறிப்பு: க்ரீம்ஸ் ரோடில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.30 கோடி 20,000 சதுர அடி என்பது சுமார் 10 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி

பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.20 கோடி 35,000 சதுர அடி என்பது சுமார் 15 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி

இவ்வாறு கூறப்படுகிறது.

இதன்மூலம் சர்ச்சைக்குரிய ஆர் எஸ் எஸ் சார்ந்த ஒரு அமைப்புக்கு 600 கோடி மதிப்புள்ள நிலத்தை தமிழக அரசு கொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Leave a Response