சென்னை காவல்துறை கொடூர தாக்குதல் – விடிய விடிய போராடும் தமிழகம்

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று பகல் 2 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அவர்களைக் காவல்துறையினர் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதில் ஒரு சிலரை கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் ஏராளமானோர் கூடினர்.

ஐந்து மணி நேரத்தைத் தாண்டி இரவிலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அதனை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனாலும் பெண்கள் நள்ளிரவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைதானவர்களை விடுவிப்பதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவித்தார்.

காவல் ஆணையரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தை பலரும் தொடர்ந்தனர்.இதனிடையே வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியைக் கண்டித்து சென்னையின் புறநகர் மற்றும் பல பகுதிகள் மட்டுமின்றி, மதுரை, கோவை, ஈரோடு,உதகமண்டலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு போராட்டம் நடைபெற்றது.அது இன்னும் தொடர்வதாகச் சொல்கிறார்கள்.

இதனால் தமிழகம் முழுதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response