ஐந்தை இழந்து மூன்றைப் பிடித்த நியூசிலாந்து – ரசிகர்கள் அதிர்ச்சி

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது. கேஎல் ராகுல் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும், மணிஷ் பாண்டே 42 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட கப்தில் அதிரடியாக விளையாடி 46 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 66 ரன்கள் விளாசினார்.அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 22 ரன்னிலும், ராஸ் டெய்லர் 12 ரன்னிலும் வெளியேறியனர். மறுமுனையில் நிக்கோல்ஸ் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 32.5 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது.

103 பந்தில் 108 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் டாம் லாம் உடன் நீசம் ஜோடி சேர்ந்தார். நீசம் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிராண்ட்ஹோம் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் என விரட்டினார். டாம் லாதம் அவருக்கு துணையாக பந்துக்கு பந்து ரன்கள் சேர்த்தார். கிராண்ட் ஹோம் அரைசதம் அடிக்க நியூசிலாந்து 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் விளாசி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியிருந்தது. தற்போது அதற்கு பழிப்பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.

கிராண்ட்ஹோம் 28 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்களும், டாம் லாதம் 34 பந்தில் 3 பவுண்டரியுடன் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response