பணிந்தது தமிழக அரசு – கல்வியாளர்கள் வரவேற்பு

தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இவ்வாண்டு முதல் நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்கள்.

இந்த நிலையில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அவற்றை ஜெயலலிதாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை இரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்து உள்ளார்.

அரசின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response