துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில்,தந்தை பெரியார் தொடர்பான சில கருத்துகளைத் தனது பேச்சில் முன்வைத்தார் ரஜினிகாந்த்.அவர் பேசிய மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.தவறான தகவல்களைச் சொன்ன ரஜினி மன்னிப்பு கோரவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஜினி ஜனவரி 21 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ரஜினி கூறியதாவது…..
துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் சொன்ன மாதிரியான நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்து நிறுவனத்திலிருந்து வரும் அவுட்லுக் பத்திரிகையில் என்ன நடந்தது என்பதை எழுதியிருக்கிறார்கள்.
அந்த ஊர்வலத்தில் ராமர் – சீதையை உடையில்லாமல் செருப்பு மாலை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இதிலேயே வந்திருக்கிறது. இல்லாத விஷயத்தை நான் ஒன்றும் சொல்லவில்லை. கற்பனையாகவும் சொல்லவில்லை. மற்றவர்கள் சொன்னதையும், இதில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். அங்கு தர்ணா பண்ணிய லட்சுமணன் சாரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நான் இல்லாத ஒன்றைச் சொல்லியிருக்கிறேன் என்று சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. கேள்விப்பட்டதையும், பத்திரிகைகளில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தமும் தெரிவிக்க முடியாது என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.
ரஜினி சந்திப்பு முடிந்த பிறகு நெல்லையில் செய்தியாளர்களுக்கு கி.வீரமணி அளித்த பேட்டி வருமாறு…..
செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் சற்று நேரத்துக்கு முன்பாக ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ‘துக்ளக்’ விழாவில் நான் பேசியது தவறு ஒன்றுமில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியை மட்டுமே நான் தெரிவித்திருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
கி.வீரமணி: 1971 இல் சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையொட்டிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியிலே வந்த ராமன் – சீதை படம் நிர்வாணமாக சித்தரிக்கப்படவில்லை என்பதும், அதேபோல அவரு டைய தகவல் தவறான தகவல் என்பதையும் அதிகார பூர்வமாக எங்களைப் போன்றவர்கள் சுட்டிக்காட்டுகிற போது, பண்புள்ளவர்களாக இருந்தால், அதை அவர்கள் தவறு என்று திருத்திக்கொள்ள வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் வருத்தம் தெரிவிப்பதோ, மன்னிப்பு கேட்பதோ அவரைப் பொறுத்தது. அவர் பண்பாட்டை, குண நலனைப் பொறுத்தது. நாங்கள் அதைப்பற்றி கவலைப் படவேண்டியதில்லை.
ஆனால், ஒரேயொரு கேள்வி – என்னவென்று சொன்னால், முக்கியமானது, அந்த விழாவிலே அவர் என்ன பேசினார்? ‘துக்ளக்’ பத்திரிகை, சோ ஒருவர்தான் அதைத் துணிச்சலாக நிர்வாணமாகப் போட்டதை அவர் எதிர்த்துச்சொன்னார் என்று.
‘துக்ளக்’ பத்திரிகையை ஆதாரமாகக் காட்டியிருக்கிறாரா? இது ஒன்று.
இரண்டாவது, சோ மட்டும்தான், வேறு எந்த பத்திரிகையும் சொல்லாதபோது, தனது ‘துக்ளக்’கில் வெளியிட்டார் என்று கூறியவர், இப்போது இன்னொரு பத்திரிகையை எடுத்துக்காட்டுவது – இவர் ஏற்கெனவே சொன்ன வாதம் பொய்யானது, தவறானது என்பதை அவரே ஒப்புக்கொண்டு விட்டாரா?
நிச்சயமாக நீதிமன்றத்தில் இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வரும். நீதிமன்றம் அதைத் தெளிவுபடுத்தும்.
அதற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும். வீதிமன்றத்துக்கு அவர் வந்தால், வரப்போகிறேன் என்று சொல்லிக்கொள்வது உண்மையானால், நிச்சயமாக அப்பொழுது அவர் தர்பார் எங்கே போய் முடிகிறது என்று தெரியும்.
செய்தியாளர்: 1971 இலே இந்த சம்பவம் நடந்தது. அது ஒரு பத்திரிகை அல்ல, ‘அவுட்லுக்’ மற்றும் பல்வேறு பத்திரிகைகளும் வெளியிட்டிருக்கிறது. அது தொடர்பில் தான் நான் தெரிவித்திருக்கிறேன் என்கிறார். அந்த பத்திரிகையில் வந்த செய்தி…?
கி.வீரமணி: பத்திரிகைகளில் வந்த செய்தியை நாடாளுமன்றமும் ஏற்காது, சட்டமன்றமும் ஏற்காது. எனவே, பத்திரிகைகளில் வந்ததை வைத்துக்கொண்டு, பத்திரிகைகளில் இவரைப்பற்றிகூட ஏராளமாக எழுதுகிறார்கள். அதை எல்லாம் உண்மை என்று அவர் எடுத்துக்கொள்வாரா? உரியவர்களிடமிருந்து ஆதாரத்தைப் பெற்றுக் காட்டினால்தான் அது சரியான ஆதாரம். அதற்கு வேண்டியதை அவர் தயாரிக்கட்டும். எங்களிடம் இருப்பதை தெளிவாகக் காட்டவேண்டிய நேரத்தில் காட்டி அதை உறுதிப்படுத்துவோம். நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
செய்தியாளர்: விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தகவல் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தக் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? வேறு எந்த காரணத்துக்காகவாவது இந்தக் கருத்து பேசப்படுகிறதா?
கி.வீரமணி: அதாவது அவருடைய அரசியல் எப்படி இருக்கும் என்பதற்கு இது முன்னோட்டம். அவர் அரசியலுக்கு வந்தால் எப்படி அரசியல் நடத்துவார் என்பதற்கு இதுவே ஒரு நல்ல முன்னோட்டம். இதிலிருந்து மக்கள் புரிந்துகொள்வார்கள். அவ்வளவுதான்.
அவருடைய அரசியல் பண்பாடு, நனிநாகரிகம் இது அத்தனையும் இதிலிருந்து தெரிகிறது. உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புவதுதான் அவருடைய அரசியலாக இருக்கும் என்பதற்கு இதுதான் முதல் கொடியேற்றம். இது தொடரட்டும்.
செய்தியாளர்: இந்த கருத்து தொடர்பாக நீதிமன்றத்திலோ, காவல்நிலையத்திலோ வழக்கு அல்லது புகார் தெரிவித்திருக்கிறீர்களா?
கி.வீரமணி: நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வரும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். திரும்பக் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும். தேவையில்லாத வகையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விளக்கம் சொல்லுவதாக நினைத்துக்கொண்டு, குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொள்கிறார் மீண்டும். குறிப்பாக சொல்லவேண்டுமானால், அந்த விழாவிலே அவர் பேசியது ‘துக்ளக்’கைத் தவிர வேறு எந்த பத்திரிகையும் துணிந்து அதை எழுதவில்லை என்றுதான் அவர் பேசினார்.
இப்போது இன்னொரு பத்திரிகையை எங்கேயோ தேடிக் கண்டுபிடித்து தவறான தகவலை வெளியிட்ட ஒரு பத்திரிகை அது. நிர்வாணமான படமோ எதுவும் கிடையாது. எனவே, செருப்பு மாலை போடப்பட்டது கிடையாது என்பது சேலம் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தெளிவாகத் தெரியும்.
அதுமட்டுமல்ல, அவர் சொன்னதையே அவர் மறுக்கிறார்.
ஆனால், மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பது அவருடைய முடிவு. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.
பெரியாரைப்பற்றி விமர்சனம் எத்தனையோ பேர் செய்து விட்டார்கள். ஆனால், பெரியாரை விமர்சித்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். பெரியார் எப்போதும் நின்று கொண்டிருக்கிறார்.
பெரியார் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்கள். இன்னும் அவர் நிறைய பேசவேண்டும் இதுமாதிரி. அதை வரவேற்கிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.