பெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி

அண்மையில் நடைபெற்ற துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில்,தந்தை பெரியார் தொடர்பான சில கருத்துகளைத் தனது பேச்சில் முன்வைத்தார் ரஜினிகாந்த்.அவர் பேசிய மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.தவறான தகவல்களைச் சொன்ன ரஜினி மன்னிப்பு கோரவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஜினி இன்று (ஜனவரி 21) பத்திரிகையாளர்களைத் தனது இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது ரஜினி கூறியதாவது…..

துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் சொன்ன மாதிரியான நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்து நிறுவனத்திலிருந்து வரும் அவுட்லுக் பத்திரிகையில் என்ன நடந்தது என்பதை எழுதியிருக்கிறார்கள்.

அந்த ஊர்வலத்தில் ராமர் – சீதையை உடையில்லாமல் செருப்பு மாலை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இதிலேயே வந்திருக்கிறது. இல்லாத விஷயத்தை நான் ஒன்றும் சொல்லவில்லை. கற்பனையாகவும் சொல்லவில்லை. மற்றவர்கள் சொன்னதையும், இதில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். அங்கு தர்ணா பண்ணிய லட்சுமணன் சாரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

நான் இல்லாத ஒன்றைச் சொல்லியிருக்கிறேன் என்று சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. கேள்விப்பட்டதையும், பத்திரிகைகளில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தமும் தெரிவிக்க முடியாது என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ரஜினியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு ரஜினி பதில் அளித்தார்.

வீட்டை முற்றுகையிடும் போராட்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் வருகைக்குப் பயத்தை உருவாக்கும் முயற்சியாகப் பார்க்கிறீர்களா?

இதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

திருமாவளவன் உள்ளிட்டோரும் இது தவறான கருத்து என்று சொல்லியிருக்கிறாரே?

நான்தான் தெளிவாகப் பதிலளிவித்துவிட்டேனே..

அந்த தருணத்தில் இருந்தவர்கள் கூட ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்களே?

நான் பார்த்ததைச் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள்.

மூடநம்பிக்கைக்கு எதிரான பேரணிக்குத் தான் செருப்பு வீசினார்கள் என்கிறார்கள். வரலாற்றை ரஜினி மாற்றிப் பேசுகிறார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறதே?

தெளிவாகச் சொல்லிவிட்டேன். நீங்களே மறுபடியும் கிளறுகிறீர்கள். அதிருப்தியான சில சம்பவங்களை மறுபடியும் மறுபடியும் நாம் பேசக் கூடாது. இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. மறக்கக் கூடிய சம்பவம்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

ரஜினி இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் இந்தச் சிக்கலை மேலும் நீட்டித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response