உலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டுப் புள்ளி பொங்கல் – சீமான் வாழ்த்து

தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல் என்று சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்ற தேசிய இனம் இந்த பூமிப்பந்தின் மூத்தக் குடியாக, முதற் குடியாக விளங்கி வருகிறது. உலகத்தின் முதல் மாந்தன் தமிழன்; அவன் பேசிய மொழி தமிழ் என்கிற உண்மைகள் அறிவியல் முடிவுகளாக வெளிவரத் தொடங்கி அறிவுலகினை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.
சமீபகால கீழடி ஆய்வுகள் தமிழரின் தொன்மை குறித்து உலகினை வியக்க வைக்கச் செய்து கொண்டிருக்கின்றன.

மற்ற இனங்களின் தோற்றம் குறித்து சிந்திக்க முடியாத காலத்தில் தமிழர்கள் நாகரீகத்துடன் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதைத்தான் நமது கீழடி மண் உலகிற்கு பறைச்சாற்றுகிறது. ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிராக மொழி இருப்பது போல உடலாக இருப்பது அதன் பண்பாட்டு விழுமியங்களே.. ஒரு தேசிய இனத்தின் மொழியும், அதன் பண்பாட்டு அடையாளங்களும் தான் அந்தத் தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிற ஆகப்பெரும் சின்னங்களாகும். அந்த வகையில் தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் முதுபெரும் பண்பாட்டு அடையாளமாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் திகழ்கிறது.

பொங்கல் திருநாள் ஒரு தனிப்பட்ட மதம் சார்ந்த பண்டிகை அல்ல என்பதுதான் மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கல் திருநாள் கொண்டிருக்கும் தனித்துவப் பெருமை. தமிழர் என்னும் தேசிய இனம் தனது வரலாற்றுப் பயணத்தில் எத்தனையோ மெய்யியல் தத்துவங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது. தமிழர்கள் பல்வேறு மதங்களுக்கு சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் மாறி இருக்கிறார்கள். ஆனாலும் எந் நிலைக்கு உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் பெற்றத்தாயின் கருப்பை ஒன்றுதானே என்பது போல தங்கள் வாழ்வியலில் தமிழர்கள் தங்கள் இனத்திற்கென அடையாளம் காணத்தக்க தனித்துவமான ஓர்மை குணாதிசயங்களை தனித்தேக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் ஓர்மை குணாதிசயங்களில் மிக முக்கியமான அடையாளம்தான் பொங்கல் திருநாள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இந்த ஓர்மை குணாதிசயங்கள் தாய்ப்பாலின் சாரம் போல, தமிழ் மொழியின் வளம் போல மாறுவதே இல்லை. வரலாற்றின் போக்கில் தமிழர்கள் எந்த மதத்தையும் தழுவி இழுக்கலாம். வாழ்வின் போக்கில் பிழைப்பினைக் கருதி ,‌ தாய் மண்ணை விட்டு அவர்கள் எந்த நாட்டிற்கும் சென்றிருக்கலாம்.

ஆனாலும் பூமியில் எந்த எல்லையிலிருந்தாலும், வாழ்ந்தாலும் தமிழர்கள் என்ற தேசிய இனத்தை இணைக்கின்ற பண்பாட்டுப் புள்ளியாக பொங்கல் திருநாள் திகழ்கிறது.‌

ஆதிக் குடியான தமிழர்கள் இயற்கையை வழிபட்ட மரபினர். அனைத்தையும் விட வல்லது இயற்கை. இயற்கைதான் அனைத்தும் தந்தது. இயற்கைதான் மனிதனை உருவாக்கியது. இயற்கைதான் மானுட இனத்திற்கு உணவூட்டி, உறைவிடம் தந்து மனிதனை வாழ வைக்கிறது என்கிற அறிவார்ந்த புரிதல் தமிழர்களுக்கு இருந்ததன் விளைவே இயற்கையை வழிபடும் மரபினன் ஆக தமிழன் திகழ்ந்தான். சூரியனிடமிருந்து வெடித்துச் சிதறிய துகள்கள்தான் கோள்களாக மாறின. அந்தக் கோள்களில் மனித இனம் வாழ்கிற நமது பூமிப் பந்தும் ஒன்று என்கின்ற பேரறிறிவு தமிழர்களிடம் இருந்தது. எனவேதான் அனைத்திற்கும் மூலமான சூரியனை தமிழர்கள் வழிபடுகிற நாளாக பொங்கல் திருநாள் திகழ்கிறது.

இந்த உலகில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஆனால் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, கடுமையாக உழைத்து, உழுது விளைச்சலைக் காணும் அறுவடைத் திருவிழாவாக பொங்கல் பண்டிகை மட்டுமே திகழ்கிறது.

வெறும் மனிதர்களுக்கு நடத்தப்படும் விழாவாக இல்லாமல்
எப்போதும் தன்னுடன் உழைத்து குடும்பத்தில் ஒருவராகவே மாறி, குடும்ப அட்டையில் இடம் பெறும் வகையில் இதயத்தில் இடம் மாறி இருக்கிற ஆடு மாடுகள் உள்ளீட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்லி பொங்கல் படைத்து வழிபட்டு மகிழ்கிற மாட்டுப்பொங்கல் நாளாகவும் ,

தனக்குச் சோறிடும் மண்ணிற்கு, விளைகின்ற மண்ணுக்கு ஒளி கொடுத்து உயிர் கொடுக்கின்றச் சூரியனுக்கு, தமிழர்கள் வழிபாடு செய்கின்ற தமிழர் திருநாளாகவும்,

பிழைப்புக் கருதி பல ஊர்களில் நாடுகளில் சிதறி,தை நாளில் தாய் மண்ணில் கூடும் உற்றார் உறவினர்களை நண்பர்களை கண்டு மகிழும் காணும் பொங்கல் நாளாகவும்
பொங்கல் பண்டிகை திகழ்கிறது.

தை முதல் நாளான பொங்கல் நாளில் இருந்துதான் தமிழரின் காலக் கணக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் இருந்து தொடங்கி தான் வளர்கிறது. அறுவடைக்கு பிறகு விதைக்கின்ற நாளாக , செழிப்பான எதிர்காலத்தினை நோக்கி நகர்கின்ற நாளாக தை முதல் நாள் திகழ்கிறது. தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு.

மத வேறுபாடுகளும், சாதிய முரண்களும் பெருக்கெடுத்து தமிழ்ச் சமூகத்தைப் பிளவு படுத்துகின்ற இந்த காலகட்டத்தில் தமிழர்கள் தாங்கள் யாரென சிந்தித்துக் கொண்டு ஓர்மை உணர்வை அடைய பொங்கல் திருநாள் பெரும் பாதையாக திகழ்கிறது. தழுவுதல், கபடி போன்ற வீர விளையாட்டுகளும், பாரம்பரிய கலைக்கூத்து வடிவங்களும் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் பண்டிகையின் பெருமைமிக்க பகுதிகளாக திகழ்வதன் நோக்கம் இதுவரை கொண்டிருந்த வேறுபாடுகளையும், எல்லா முரண்களையும் களைந்துவிட்டு தமிழர்கள் தங்களை தமிழர்களாக உணர்ந்து ஓர்மைக் கொள்ள வேண்டும் என்கின்ற முன்னோர்கள் வகுத்து வைத்த மகத்தான சிந்தனையின் வெளிப்பாடே ஆகும்.

இப்படிப்பட்ட பெருமையோடு வாழ்ந்த தமிழினம் இன்று மொழி சிதைந்து, கலை இலக்கியம் பண்பாடு , மெய்யியல் கோட்பாடு, நிலவளம், நீர்வளம், காடுவளம், கனிமவளம் என அனைத்தையும் இழந்து அழிவின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த அழிவிலிருந்து நம் இனத்தை, நம் நிலத்தை காப்பாற்ற தமிழின இளம் தலைமுறையினர் அணியமாக வேண்டிய தேவை தற்போது எழுந்திருக்கிறது.

வரலாற்றின் வீதிகளில் பன்னெடுங்காலமாக தாழ்ந்து வீழ்ந்திருக்கின்ற தமிழர்கள் தமக்குள்ளாக கொண்டிருக்கின்ற மனக்கசப்புகள், சாதிமத பிளவுகள் ஆகியவற்றை கடந்து தமிழராக இணைந்து நிமிர வேண்டிய‌ கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. இவற்றை எல்லாம் உணர்த்தி நமக்கு வழிகாட்டுகிற நாளாக திகழ்கிற பொங்கல் பண்டிகையை நாம் நெஞ்சார்ந்துப் போற்றி கொண்டாடுவோம்.

வீட்டுக்கு வீடு சர்க்கரைப்பாகும், அதில் ஊறுகின்ற புதுச் சோறும் பொங்கி வழிகிற இந்த மகிழ்ச்சித் தருணத்தில் உலகமெங்கும் வாழ்கின்ற என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகளுக்கு தமிழர் திருநாளான பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

அநீதிக்கு எதிராக , அடக்குமுறைகளுக்கு எதிராக,
பசி,பஞ்சம், பட்டினி, ஊழல், லஞ்சம்
சாதீய இழிவு, தீண்டாமை,பெண்ணடிமை , மது மதப் போதை, பாலியல் சுரண்டல், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக,
நிலவளச் சுரண்டலுக்கு எதிராக, உலகமய ஏகாதிபத்திய பெருங் கொள்ளைக்கு எதிராக,

தமிழர் நலனுக்காக,
தமிழர்களின் ஒற்றுமைக்காக..

தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும்,
பொங்கட்டும்
புரட்சிப் பொங்கல்.

அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response