தஞ்சை பெரிய கோயில் பிராமண வேத மொழிக்கு உரிய ஐதீகம் அன்று – பிராமணர்கள் அதிர்ச்சி

தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய உலகப்புகழ் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் / பிரகதீசுவரர் கோயில் குடமுழுக்கு வருகின்ற 5.2.2020 அன்று தஞ்சையில் நடைபெறவுள்ளது.

இக் குடமுழுக்கைத் தமிழர் மரபுப்படி தமிழ்வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைப்பதற்காக 29.12.2019 அன்று மாலை, தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு தலைவர் ஐயனாவரம் சி.முருகேசன் தலைமை தாங்கினார். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், பொருளாளர் பழ.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சித்தர் நெறி பதிணென் சித்தர் பீடம் மூங்கிலடியார் பொன்னுசாமி சாமிகள், பதிணென் சித்தர் சத்தியபாமா அறக்கட்டளை மருத்துவர் சத்தியபாமா அம்மையார், காரைக்குடி முத்துராசு, மதுரை உத்திராபதி உள்ளிட்ட தமிழர் ஆன்மிகச் செயல்பாட்டாளர்களும்,

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் சேகுவேரா, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், அ.ம.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, மேலை சிவபுரி கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் தா.மணி, தமிழர் ஆன்மீகச் செயல்பாளர்கள் இறைநெறி இமையவன், பொறியாளர் தென்னன் மெய்மன், இந்திய யூனியன் முசுலீம் லீக் மாவட்டத் தலைவர் சைனுலாப்புதீன், கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

கூட்டத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழர் மரபுப்படி தமிழ்வழியில் நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழ்வழிக் குடமுழுக்கு வேண்டுகோளுக்காக வரும் 23.01.2020 அன்று தஞ்சையில் மாபெரும் மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.தஞ்சைப் பெருவுடையார் கோயில் / பிரகதீசுவரர் கோயில் இந்து மதத்தில் தமிழ்ச் சிவநெறிப் பிரிவைச் சேர்ந்த தனித்துவமான வகையறாக் கோயில் (Belongs to Hindu Tamil Saivite Denomination Temple).

2.தமிழ்ச் சைவ வகையறாக் கோயில்களில் நடத்த வேண்டிய அர்ச்சனை வழிபாடு, குடமுழுக்கு போன்ற புனிதச் சடங்குகள் எவ்வாறு நிகழ்த்தப் பெற வேண்டும் என்பதற்குத் தமிழ் ஆகமங்கள் இருக்கின்றன. இந்த ஆகமங்கள் இந்தியாவிலேயே தமிழ் இந்துக் கோயில்களுக்கு மட்டுமே உரியவை.

தமிழில் அசலாக எழுதப்பட்ட ஆகம நூல்கள் 28 என்று திருமூலர் தமது திருமந்திர நூலில் குறிப்பிடுகிறார். இந்த ஆகமங்களின் சாரம் திருமந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் / தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே” என்று திருமந்திரத்தில் திருமூலர் தன்னைப் பற்றியும், இறைவனுக்குரிய மொழி தமிழ் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.

ஆகமங்களின் மூலத்தமிழ் நூல்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து போயின. திருமந்திரம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களின் வழிகாட்டல்படியும் வழிவழியாகத் தமிழ் ஆன்மிகச் சான்றோர்கள் அடுத்தடுத்த தலைமுறையினர்க்குக் கற்றுத்தந்த மரபுக் கல்வியாகவும் தமிழ் ஆகமங்கள் செயல்படுகின்றன.

குறிப்பாக, சமற்கிருத மொழிக்கும் தமிழ் ஆகமங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. சமற்கிருதப் பண்டிதர்கள் தங்கள் நோக்கத்திற்கேற்ப தமிழ் ஆகமங்களை சமற்கிருத ஆகமங்களாக மாற்றி எழுதிக் கொண்டனர்.

சமற்கிருத வேதங்கள் நான்கிலும் ஆகமக் கருத்துகள் கூறப்படவில்லை. இறைவன் / இறைவிக்குக் கோயில் கட்டி வழிபடும் முறை அவ்வேதங்களில் கூறப்படவில்லை. குறிப்பாக, சிவலிங்க வழிபாடு ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களில் குறிப்பிடப்படவில்லை.

3.தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் / பிரகதீசுவரர் கோயில் “காரண ஆகமப்படி” கட்டப்பட்டது. கல், செம்பு, இரும்பு போன்ற பொருட்களில் வடிக்கப்படும் சிலையானது தெய்வம் உறையும் (தங்கும்) இடம் என்ற ஆகமம் தமிழர்க்கும், தமிழுக்கும் உரிய ஐதீகம்! இது பிராமண வேத மொழிக்கு உரிய ஐதீகம் அன்று.

“ஆகமம் ஆகி அண்ணிப்பான் தாள் வாழ்க” என்று திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் கூறினார். சிவபெருமானுக்கு நெருக்கமாக நின்று இறைவனை வழிபடும் உரிமையை ஆகமப்படி சிவபெருமானே வழங்குவதாக மாணிக்கவாசகர் கூறுகிறார்.

தஞ்சை பெருவுடையார் கோயில் / பிரகதீசுவரர் கோயிலை எழுப்பிய பேரரசன் இராசராசன் சிறந்த சிவநெறியாளர். அவர்தாம் சிதம்பரத்தில் சூழ்ச்சிக்காரர்கள் பதுக்கி மறைத்து வைத்திருந்த தேவாரத் திருமுறைகளை மீட்டார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் / பிரகதீசுவரர் கோயிலில் தேவார, திருவாசகத் திருமுறைகளைப் பாடி வழிபடுவதற்காக, தமிழ் ஓதுவார் மூர்த்திகளை அமர்த்தியவர் இராசராசன் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன.

தெய்வப் படிமங்களைத் தமிழ் மந்திரம் சொல்லி அர்ச்சிக்கும் முறை / வழிபடும் முறை தமிழர்களுக்கும் தமிழுக்கும் மட்டுமே உண்டு. ஆரிய – பிராமண வேத மரபுக்கு இவ்வழக்கம் இல்லை.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த / மறைமொழி தானே மந்திரம் என்ப” என்று தொல்காப்பிய நூற்பா 1434 தமிழர் மரபைக் கூறுகிறது.

வழிபடும் முறையை, “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் / சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று / இருமூன்று வகையிற் கல்லொடு புணர” என்று தொல்காப்பிய நூற்பா 1006 கூறுகிறது.

தெய்வப் படிமங்கள் – சிலைகள் மீது தண்ணீர்த் தெளித்தும், படிமங்களைத் தண்ணீரால்

குளிப்பாட்டியும் வழிபடும் “நீர்ப்படை” தமிழர்களுக்கு மட்டுமே உரியது.

4.தமிழ்நாட்டு இந்து சிவநெறி, திருமால் நெறி மற்றும் குலதெய்வக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று இந்து அறநிலையத்துறை ஆணை பிறப்பித்திருக்கிறது.

தமிழக இந்து அறநிலையத்துறையின் அலுவல் மொழி தமிழ். தமிழ்நாடு அரசின் அலுவல் மொழி தமிழ்.

எனவே, வருகின்ற 5.2.2020 அன்று தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் / பிரகதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கையும், அத்திருக்கோயிலில் உள்ள அனைத்துத் தெய்வப் படிமங்களின் திருக்குடமுழுக்கையும் தமிழர் ஆன்மிக மரபுப்படி தமிழ்வழியில் நடத்துமாறு தமிழ்நாடு அரசையும் இந்தியத் தொல்லியல் துறையையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்கள் பிராமணர்களுக்கும் சமக்கிருத மொழிக்கும் எதிராக அமைந்திருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response