7,513 ட்விட்டர் 9,076 பேஸ்புக் 172 யூடியூப் பதிவுகள் முடக்கம் – உ.பி அரசு அட்டூழியம்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன.அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் துணை இராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலந்த்சாகர், ஆக்ரா, சம்பல், பிஜ்னோர், சஹரன்பூர், காஜியாபாத், முசாபர்நகர், ஃபிரோசாபாத், மதுரா, ஷாம்லி மற்றும் அலிகார் உள்பட 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் தொழுகை நடத்தும் மக்களை கருத்தில் கொண்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லக்னோ, அயோத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோரக்பூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறைகள் போல் எங்கும் ஏற்படாதிருக்க துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தி, அமைதியைக் காக்கும்படி வலியுறுத்தினர். சமூக ஊடகங்களைத் தீவிரமாக கண்காணித்து வருகிறது அரசாங்கம்.

இதற்கிடையில், சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் டிசம்பர் 10 முதல் 24 வரை வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக 498 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களை சமூக விரோதிகள் என்று அரசாங்கம் சொல்லிவருகிறது. சேதங்களை ஈடு செய்ய அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசு முடிவுசெய்துள்ளது.

லக்னோவில் 82 பேர், மீரட்டில் 148 பேர், சம்பலில் 26 பேர், ராம்பூரில் 79 பேர், பெரோசாபாத்தில் 13 பேர், கான்பூரில் 50 பேர், முசாபர்நகரில் 73 பேர், மாவோவை சேர்ந்த 8 பேர் மற்றும் புலந்த்சாகரை சேர்ந்த 19 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

லக்னோ டிஜிபி தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் வன்முறை மற்றும் தீவைப்பு ஆகியவற்றிற்காக மொத்தம் 213 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,558 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7,513 ட்விட்டர் பதிவுகள், 9,076 பேஸ்புக் பதிவுகள் மற்றும் 172 யூடியூப் வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை பழிவாங்கும்விதமாக பாஜக அரசு நடந்துகொள்கிறதெனப் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

Leave a Response