ஜார்கண்ட்டில் ஆட்சியை இழந்தது பாஜக – தேர்தல் முடிவுகள் முழுவிவரம்

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கி, இம்மாதம் 20 ஆம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்- ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஒரே அணியாக களம் இறங்கின. முதல்வர் வேட்பாளராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அறிவிக்கப் பட்டார்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்த ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜா தந்திரிக்), அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகிய கட்சிகள், தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இருந்து விலகி விட்டதால், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது.

இதுதவிர, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளும் போட்டியிட்டன.

ஜார்கண்ட் மாநிலம், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்தது என்பதால், பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கையும் பலத்த பாதுகாப்புடன் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசு கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. சில நேரங்களில் இரு கூட்டணியும் ஏறக் குறைய சமமான இடங்களில் முன்னிலையை தக்க வைத்து வந்தன.

நேரம் செல்லச்செல்ல காங்கிரசு கூட்டணி தெளிவான முன்னிலை பெறத் தொடங்கியது. இறுதியில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இங்கு ஆட்சி அமைக்கக் குறைந்தபட்சம் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதாதளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

பா.ஜனதா 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாணவர் சங்கம், சுயேச்சைகள் ஆகியோர் தலா 2 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், புதிய முதல்வர் ஆகிறார்.

தற்போது முதல்வராக இருந்த பாஜகவின் ரகுபர் தாஸ், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமண் கிலுவாவும் தோல்வியைத் தழுவினார். ஹேமந்த் சோரன், தான் போட்டியிட்ட பரேட், தும்கா ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave a Response