டெல்லி காவல்துறை அராஜகம் – இந்தியா முழுக்க மாணவர் போராட்டம் வெடித்தது

டெல்லியில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஒரு கும்பல் சில பேருந்துகளுக்கு தீ வைத்தது. இதனால் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.

காவல்துறையினர், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தும் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

காவல்துறையினரின் இந்த அத்துமீறல்களைக் கண்டித்தும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரியும்
டெல்லியில் நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். மாணவிகளும் இதில் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தேர்வுகளைப் புறக்கணித்து போராட்டத்துக்கு ஆதரவாகக் குவிந்தனர். கடும் குளிரிலும் பல மாணவர்கள் சட்டை அணியாமல் முழக்கம் எழுப்பினார்கள்.

மாணவர்கள் சிலர் கூறும்போது, “நாங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்தான் இருந்தோம். பல்கலைக்கழகத்தின் முன்வாசல் மற்றும் பின்வாசல் வழியாக காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று கூறியும் அதை கேட்கவில்லை. மாணவிகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை” என்றனர். ஒரு மாணவி தனது காயத்தை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.

கைது செய்யப்பட்ட 50 மாணவர்கள் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் பல்கலைக் கழகத்தில் நேற்று பதற்ற நிலையே காணப்பட்டது. ஜனவரி 5-ந் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்யும்படியும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில், முதலில் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்துகொண்டனர்.

டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நாட்வாதுல் உலாமா கல்லூரியில் காவல்துறையைக் கண்டித்தும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்த முயன்றபோது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த காவல்துறையினர் அவர்களை வெளியே அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் வளாகத்துக்குள் இருந்து முழக்கம் எழுப்பினர்.

ஐதராபாத் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், மும்பை டாடா சமூக அறிவியல் கல்லூரி உள்பட நாடு முழுவதும் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், டெல்லியில் நடந்த தடியடியைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வழக்கமாகப் போராட்டங்களை தவிர்த்துவரும் ஐ.ஐ.டி. மாணவர்களும் காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள், வளாகத்துக்குள் உள்ள கஜேந்திரா சர்க்கிளில் கூடி போராடியதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல கான்பூர் ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இந்தியா முழுவதும் பதட்டத்தில் இருக்கிறது.

Leave a Response