தீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுள்ள இந்தச்சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்தநிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் 3 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது.

தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதமடைந்தது. 2 பேர் காயம் அடைந்தனர். போலீஸ்காரர் ஒருவரும் காயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

இந்தநிலையில், இரவில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் திடீரென மோதினர். இதில் போலீசார் மீது கல்வீசப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலை. வளாகத்திற்குள் போலீசார் நுழைந்தனர். மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர்.

பல்கலைகழகத்தை ஒட்டிய பல்வேறு சாலைகளை போராட்டக்காரர்கள் மறித்து பாதிப்பை ஏற்படுத்தியதால் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைதியாக நடந்த போராட்டத்தின் போது போலீசாரே மாறுவேடத்தில் வந்து வாகனங்களுக்குத் தீ வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

அதன்பின் அதையே காரணமாகச் சொல்லி பல்கலை வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும் சொல்கிறார்கள்.

Leave a Response