என் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலைப் படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில்,உடற் கூறாய்வு முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.கூடவே மாணவியின் உடைமைகளும் ஒப்படைக்கப்பட்டன.

இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், மாணவியின் கைபேசியை ஆராய்ந்த போது அதில், தனது தற்கொலைக்கு உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்.

மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.

அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததும் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response