தொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்

அயோத்தி பாபர் மசூதி வழக்கில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய தொலியல்துறையின் தற்போதைய செயல்களை அம்பலப்படுத்தும் பேராசிரியர் த.செயராமனின் பதிவு……

இந்துத்துவ சக்திகளின் தொல்லியல் துறையாக, இந்துத்துவவாதிகளின் கோளாறான பார்வைக்கு சான்றுகளை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு அமைப்பாக இந்திய தொல்லியல் துறை(Archaeological Survey of India – ASI) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

1978-இல் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருந்த தெளலதாபாத் கோட்டையில் இருந்த ஜூம்மா மசூதி பாரதமாதா கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. பாரதமாதா என்ற கருத்தியலே சமீபத்தியது.

இடைக்கால வரலாற்றுச் சின்னத்தை உருமாற்றி, பெயர் மாற்றுகிற வேலையை இந்திய தொல்லியல் துறை செய்திருக்கிறது.

1970 இல், ஹைதராபாத்தில் வரலாற்றுச் சின்னமான சார்மினாரின், குங்குமச் சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதியை முழுமையாக பாக்கியலட்சுமி கோயிலாக மாற்றியமைப்பதற்கு இந்தியத் தொல்லியல் துறை அனுமதித்தது. ஒரு பெரிய, இடைக்காலத்தைச் சேர்ந்த வரலாற்று நினைவுச் சின்னத்தில் ஒரு நவீன கட்டிடம் இப்போது துருத்திக் கொண்டு நிற்கிறது .

வரலாற்றுப் புகழ் மிக்கது; வெல்லுவதற்கு அரிதானது கோல்கொண்டா கோட்டை என்று வரலாறு பேசுகிறது. ஆனால், கோட்டையின் முதன்மை வாயில்களில் இந்து கோயில்களும் காவிக் கொடிகளும் இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இப்போது முளைத்திருக்கின்றன,

பீகாரில், இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள ஷெர்ஷா சூர் கட்டிய மசூலியத்தின் வளாகப் பகுதியில் புத்தம் புதியதாக மூன்று இந்து கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகள் 1977 க்கு பிறகு நடந்துள்ளன. இவற்றை செய்து முடிக்க இந்தியத் தொல்லியல் துறை அனுமதித்தது.

மத்திய பிரதேசத்தில் தார் என்ற இடத்தில் உள்ள, பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கமால் மவுலானா மசூதியை, 2003இல் இந்து வழிபாட்டிடமாக தொல்லியல் துறை மாற்றியிருக்கிறது.

2007-இல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர் கோட்டையில், இராணி பத்மினி நெருப்பில் இறங்கிய இடம் என்று ஒரு சுரங்கத்தைப் பொய்யாக தொல்லியல் துறை திரித்துக் கூறியது. இடைக்கால சித்தூர் கோட்டையைச் சுற்றிலும் இப்போது ஏராளமான கோயில்கள் முளைத்துவிட்டன.

வரலாற்றுச் சின்னங்களை இந்து மதச் சின்னங்களாக மாற்றி அமைப்பதைத் தன்னுடைய புனிதக்கடமையாகக் கருதி இந்தியத் தொல்லியல் துறை செயல்பட்டுவருகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அகழ்வாய்வு என்ற பெயரில் இந்தியத் தொல்லியல் துறை ஏராளமான புனைவு வேலைகளைச் செய்து முடித்தது. கிடைத்திருக்கும் சான்றுகளின் அடிப்படையிலேயே விவாதிக்க வரலாற்றாளர்களும் தொல்லியலாளர்களும் தயாராகவே இருக்கிறார்கள்.

இந்தியத் தொல்லியல் துறையின் பொய் அறிக்கையின் அடிப்படையில்தான் அலகாபாத் உயர்நீதி மன்றமும் முடிவெடுத்தது. உச்சநீதிமன்றமும் முடிவெடுத்துள்ளது.

நடந்து கொண்டிருப்பது “தொல்லியல் பயங்கரவாதம்”. நெருப்பில்லாமல், புகையில்லாமல் வரலாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!
இந்தியத் தொல்லியல் துறை அம்பலப்படும்!

_ பேராசிரியர் த. செயராமன்,
வரலாற்றுத் துறை .
11.11.2019.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response