அயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்

அயோத்தி தீர்ப்பு குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதியுள்ள கட்டுரை….

’அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாக’ சொல்கிறார் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி. வேறுபாடின்றி ஏறக்குறைய எல்லா அரசியல்வாதிகளும் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள்.

வருவாய்த் துறை ஆவணங்கள் படி, சர்ச்சைக்குரிய இடம் அரசுக்குச் சொந்தமானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறெனில் ”யாரும் இதில் உரிமை கோரக் கூடாது; அரசுக்கு மட்டுமே உரிமையானது” என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தொல்லியல் துறை நடுவண் அரசின் துறைகளில் ஒன்று. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுவதில் அர்த்தம் உண்டு. எந்தத் தரப்பினரும் வழிபாடு செய்ய அனுமதிக்கக்கூடாது; பேணிக் காக்கும் பொறுப்பு தொல்லியல் துறைக்கு மட்டும் உண்டு எனச் சொல்லியிருந்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக அமைந்திருக்கும்.

நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது எனில் அந்த முடிவைப் பற்றி மூச்சுக் காட்டக் கூடாது என்ற பொதுக்கருத்து இங்கு நிலவுகிறது: ஜனநாயகம் என்பது விமர்சனப் பாங்கு என்பதின் மறு உருவம். பூமிக்கு மேலே ஆகாயத்துக்குக் கீழே உயிர்ப்பு அசைவுள்ள எக்கருத்தினையும் விமர்சிக்கும், ஆய்வுக்கு உட்படுத்தும் பொறிமுறைதான், நெறிமுறைதான் சனநாயகம்.

உச்ச நீதிமறத் தீர்ப்பில் நிறைய கேள்விகள் இருக்கின்றன;

கேள்வி – 1.

வருவாய்த் துறை ஆவணங்கள் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்குச் சொந்தமானது எனில் அரசுக்குச் சொந்தமாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும். அரசுக்குச் சொந்தம் ஆக்காமல் ராமர் கோயில் கட்ட அனுமதித்தது எவ்வாறு?

கேள்வி- 2.

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு அடியில் கட்டிடம் இருந்துள்ளதாக தொல்லியல் துறை ஆய்வு தெரிவிக்கிறது. அந்தக் கட்டிடம் இஸ்லாமிய வழிபாட்டுத் தளம் அல்ல என்று ஆய்வு தெரிவிக்க வில்லை;சர்ச்சைக்குரிய அந்த பாபர் மசூதி கட்டிடம் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறது. கட்டிடம் ராமர் கோவில் தான் என்றும் தொல்லியல் துறை ஆய்வு வெளிப்படுத்தவில்லை.

” பாபர் மசூதிக்குள் ஒரு கட்டிடம் இருந்துள்ளது; அந்தக் கட்டிடம் முஸ்லிம் சமூகத்தின் கட்டிடத்தைப் போல் அல்லாமல் வேறு மாதிரியாக இருக்கிறது. அது குப்தர்கள் காலத்தை சேர்ந்தது போல் உள்ளது. கட்டிடத்தின் கீழ் 15-க்கு 15 மீட்டர் சுற்றளவுள்ள அடித்தளம் உள்ளது. கட்டிடத்தின் கீழ் நடுப்பகுதியில் சில முக்கியமான பொருள்கள் கிடைத்தன . வட்ட வடிவமான அந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்; மேலும் சர்ச்சைக்குரிய நிலத்தின் வட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 50 மீட்டர் பரப்பளவு உள்ள கட்டிடம் பதினொன்றாம் நூற்றாண்டு அல்லது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்; இதுதவிர மேலும் ஒரு பெரிய கட்டிடம் அங்கு கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது .அந்த கட்டிடத்தின் கீழ் இருந்து 50 தூண்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் சில அரசர்கள் காலத்து இடிபாடுகளும் கண்டெடுக்கப்பட்டன.அதன் எஞ்சிய பொருட்கள் புத்தர், ஜெயின் கோயில்களின் இடிபாடுகளாக இருக்கலாம்”

என்கிற தொல்லியல் ஆய்வு அறிக்கையில் ராமர் கோயில் இருந்ததற்கான எந்தச் சான்றும் கூறப்படவில்லை.

ஆனால் தூண்கள், இடிபாடுகள்,வடவடிவக் கட்டிடம்( இதனைக் கோயில் என்கிறது தொல்லியல்) இவைகளைக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாமல், ஈரெட்டாய்த் தான் கருத்துக் கூறியுள்ளது. அப்படியானால் ராமர் கோயில் கட்டுவதற்கு தீர்ப்பில் நிலம் தூக்கி கொடுக்கப்பட்டது எதனால்?

கேள்வி – 3.

’நஜுன் நிலம்’ என்றால் புறம்போக்கு நிலம் என்று பொருள் .பாபர் மசூதி இருந்த இடம் புறம்போக்கு நிலம். அதனாலேயே புறம்போக்கு நிலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அதே இடத்தை உரிமை கொண்டாடும் ராம ஜென்ம பூமி நிலமும் புறம்போக்கு தானே? பாபர் மசூதி இடம் தங்களுக்குச் சொந்தமானது என முஸ்லிம் தரப்பினர் அளீத்த ஆதாரங்கள் ஏற்கப்படவில்லை என தீர்ப்பு தெரிவிக்கிறது ஆனால் அந்த புறம்போக்கு நிலம் ராமஜென்ம பூமி என்பதற்கான ஆதாரம் இல்லாத போது, இஸ்லாமியர்களுக்கு உரித்தான புறம்போக்கு நிலத்தை இந்துக்கோயில் திறப்பதற்கு உரித்தானதாக்கியது எதனால்?

கேள்வி- 4.

”நஜூன் நிலம்” அதிகபட்சமாக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்ள,ஆங்கிலேய அரசு ஆட்சிக்காலத்திலேயே வழிசெய்து தனித்துறையை உருவாக்கியது. குத்தகையைப் புதுப்பித்து மீண்டும் நிலம் ஒதுக்குவது உண்டு. நஜூல் நிலத்தை குத்தகைக்கு எடுக்க இந்துக்கள் தரப்பில் முயன்றிருக்க வேண்டும். அவ்வாறு முயற்சி செய்யவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

அத்வானி பா.ச.க. தலைவர் ஆன பிற்பாடு தான் அயோத்தியில் ராமர்கோயில் எழுப்புவதை பா.ச.க. தனது கொள்கையாகவே மாற்றியது. ராம ஜென்ம பூமியை மீட்டெடுத்து ,ராமர்கோயில் கட்டுதல் ’என் ஜென்ம பலன்’ என சூளுரைத்து அத்வானி ரதயாத்திரையைத் தொடங்கிய பின்னர்தான் மதச் சூறாவளியால் நாடு சின்னாபின்னமாகியது.

ரத யாத்திரைக்குப் பின்னர் வட இந்தியாவில் மத அடிப்படையில் அணிதிரளவ்தும் மதக்கலவரங்கள் நடப்பது சாதாரணமாகியது. அது அயோத்தியாய் உச்சத்துக்குச் சென்று மத நல்லிணக்கத்துக்குச் சமாதி கட்டியது.

ஆனால் தொடர்ந்து அரசிடம் விண்ணப்பித்து குத்தகையைப் புதுப்பித்து வந்த இஸ்லாமியத் தரப்பினர் 1954- காலத்தின் பின் புதுப்பிக்கவில்லை.1954- ல் அமைந்த வஃபு வாரியச் சட்டத்தின்படி, சன்னி மத்திய வஃபு வாரியப்பட்டியலில் பாபர் மசூதி சேர்க்கப்பட்டதால் , வ்ஃபு சொத்தாகக் கருதப்படும் மசூதியின் நஜூல் குத்தகையை புதுப்பிக்கத் தேவையில்லை என அதன் நிர்வாகிகள் கருதி விட்டுவிட்டனர். குத்தகை செலுத்தாததால் உரிமைகொள்ளும் ஆதாரமில்லை என்று கூறி, அவர்களின் கையை விட்டுப் போவதற்கு வழிசெய்த தீர்ப்பு, குத்தகையே செலுத்தாத இந்துத்தரப்பினர் கைகளில் நிலம் போக பாதை போட்டது எவ்வகையில் நியாயம் ?

இன்னும் இன்னும் நிறைய நிறையக் கேள்விகள் – நியாயத் தீர்ப்புகளுக்காக !

Leave a Response