திருவள்ளுவருக்கு பாஜக காவி உடை – ரஜினி ஆதரவு

நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (நவம்பர் 8) காலை சென்னை கமல் அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழா நடந்தது.

அதில் பாலசந்தரால் உருவான நடிகர் ரஜினியும் கலந்து கொண்டார்.கமல் ரஜினி ஆகிய இருவரும் இணைந்து பாலசந்தரின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தனர்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் ரஜினி.

அப்போது கூறியதாவது….,

எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. பாஜக எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடும் எண்ணமில்லை.

பாஜக உறுப்பினராக என்னை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனக்கு சிறப்பு விருது அறிவித்தவர்களுக்கு நன்றி. பாஜகவில் சேரவோ, தலைவராகவோ யாரும் என்னை அணுகவில்லை.

திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். திருவள்ளுவர் போன்ற ஞானிகள் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்தது அவர்களுடைய விருப்பம்.

திருவள்ளுவருக்கும் எனக்கும் பாஜக சாயம் பூச முயல்கிறார்கள். இருவருமே தப்பிவிடுவோம். பேச வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு, திருவள்ளுவர் விஷயத்தைப் பெரிய சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது

இவ்வாறு கூறினார் ரஜினிகாந்த்.

Leave a Response