சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ ( ICON OF GOLDEN JUBILEE) என்ற விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. ரஜினிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டிருக்கிறது.
மூத்த இதழாளர் சாவித்திரி கண்ணனின் பதிவு….
விவாதத்திற்கே இடமின்றி இயல்பாக யாரும் ஒத்துக் கொள்வார்கள் – ரஜினிகாந்த் வெகுஜன ஈர்பில் வெற்றியின் உச்சத்தை தொட்டவர்தானேயன்றி,
திரைப்படத்துறைக்கு சேவையாற்றியவர் அல்ல!
திரைப்படத்துறைக்கு சேவையாற்றினார் என்று சொல்லத்தக்க தகுதியை ஒரு படைப்பாளிக்குத் தருவது தான் அறிவார்ந்த செயலாக இருக்கமுடியும்!
மனசாட்சி இருந்தால் ரஜினி இதை மறுத்திருக்ககூடும்! அறிவு நாணயம் இருந்தால்,இதை புறக்கணித்திருக்க வேண்டும்!
மக்கள் தந்த மிகப் பெரிய அங்கீகாரம் போதுமானது என்று அவரால் மறுக்க முடியவில்லையே!
திரைப்படத்துறையில் அதிகபட்ச வசூல் சாதனை படங்களைத் தந்ததோ,
அதிக சம்பளம்(கருப்பாகவும்,வெள்ளையாகவும்) பெறுவதோ,
சிகரட்டை ஸ்டைலாக வாயில் போடத் தெரிந்ததாலோ ஒருவர் சேவை விருதுக்கு தகுதியாக முடியுமா?
கொடுக்கிற அரசும் தகுதியற்றதாக இருக்கும் போது,.
பெறுகிறவரிடம் என்ன தகுதியை எதிர்பார்ப்பது?
திரைப்படத் துறையை ஒரு நியாயமற்ற, அநீதியான ஒரு வர்த்தக சூதாட்டத்திற்கு தள்ளியதில் ரஜினிக்கு முக்கிய பங்குண்டு!
சமூகத் தளத்தில் பெண்கள் மீதான மிகவும் பிற்போக்குத் தனமான ஆணாதிக்க கருத்தை பரப்பியதில், வலுப்படுத்தியதில் அவருக்கு முக்கிய பங்குண்டு!
திரைக்கலையின் மகத்தான செல்வாக்கை முட்டாள்தனமான ரசனைகளை உருவாக்கி,ஆதாயம் அடைவதில் தான் அவர் கவனம் செலுத்தினார்…!
இவ்வளவு தான் அவர் குறித்த என் மதிப்பீடு என்றாலும், ரஜினியை பொறுத்த வரை தன்னளவில் ஒரு தீய நோக்கங்களற்ற மனிதர் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்.
ஏனெனில்,திரைப்படத் துறையின் மாபெரும் சீரழிவு கலாச்சாரத்திற்கு ரஜினியை மட்டும் பொறுப்பாக்க முடியாது. அது அவரது வருகைக்கும் முன்பிருந்தே சீரழிந்துதான் இருந்தது.
அதை எந்த விதத்திலும் சீர் செய்ய அவர் முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல,அந்த சீரழிவோடு ஒத்திசைந்து தன்னை உயர்த்திக் கொண்டார் அவ்வளவே!
திரைப்படத் துறையில் சீரழிவு சக்திகளுடன் ஒத்திசைந்து ஆதாயம் அடைந்தது போல, அரசியல் தளத்திலும் சீரழிவுக்கு காரணமான சக்திகளுடன் கைக்கோர்க்க ரஜினி தயாராகிவருகிறார் என்பது தான் இந்த விருது நமக்கு உணர்த்தும் செய்தி!
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.