கனமழை – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் என்பது அரசு அதிகாரிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவது ஆகும்.

ஒரு நாளில் 22 செ.மீக்கு மேல் மழை பெய்தால் அதனை சிவப்பு எச்சரிக்கையாக வானிலை மையம் அறிவிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகவே பெய்து வருகிறது. இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

அக்டோபர் 15 ஆம் தேதி முதலே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இந்த மழையினுடைய தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் 22 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு நேற்றைய தினம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும் போது,

தென் தமிழகம் மற்றும் குமரிக் கடலையொட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான வடதமிழகம், தெற்கு ஆந்திராவையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதேபோல்,அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதனால், அடுத்த 2 தினங்களுக்குதமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வட தமிழகத்தைப் பொறுத்தவரை நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், தி.மலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கூறி உள்ளார்.

இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் தமிழகம், கேரளாவில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை அதி தீவிர கனமழை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Response