இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐந்துநாள் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
அதையொட்டி அணித்தலைவர் விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங் பணியை ரிஷப் பந்த்துக்குப் பதிலாக விருதிமான் சாஹா கவனிப்பார்.
சாஹா உடல்நலத்தோடு நலமாக இருக்கிறார். முதல் போட்டியில் அணியில் சாஹா இடம் பெறுவார். சாஹாவின் விக்கெட் கீப்பிங் திறமை அனைவருக்கும் தெரிந்தது. உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் சாஹா. எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சிறப்பாக தனது திறமையை நிரூபித்தும் வருகிறார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக அவரால் அணியில் இடம் பெற முடியவில்லை. உள்நாட்டு சூழல் சாஹாவுக்கு நன்கு ஒத்துழைக்கும் என நினைக்கிறேன்.
சாஹாவை அணிக்குள் மீண்டும் கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பியது. மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் அழைத்துச் சென்றபோதிலும் அவரால் விளையாட முடியவில்லை.
ரிஷப் பந்த்தைப் பொறுத்தவரை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடினார். இருந்தாலும், சாஹா சிறப்பான தொடக்கத்தை அளிக்கக் கூடியவர்.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை சாஹாவுக்குத்தான் முதல் வாய்ப்பு. நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர் சாஹா. அவர் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இப்போது அணிக்குள் வந்துள்ளார்.
இந்தப் போட்டியில் இரு சிறப்பு வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகிய இருவரும் விளையாடுவார்கள். மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக ஹனுமா விஹாரி இருப்பார்.
மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், ஜடேஜா வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தினார்.
இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் பிரதானமாக பந்துவீச்சாளராக இருந்து முதலில் பந்து வீசுவார். ஜடேஜாவும் அஸ்வினுக்குத் துணையாக இருப்பார். நமக்கு சூழல் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
உள்நாட்டில் அஸ்வினின் பந்துவீச்சு எதிரணியினருக்கு நிச்சயம் அச்சுறுத்தலாகவே இருக்கும். பேட்டிங்கிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படுவார்.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.